ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போர் வீட்டு மனை பட்டா பெற்றிட - தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போருக்கு, அவர்களின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டம் மூலம், ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருவோருக்கு வரன்முறைப்படுத்தி, தகுதியுள்ள நபர்களுக்கு பட்டா வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கு,
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருவதற்கான வீட்டு வரி ரசீது,
மின் கட்டணம் செலுத்தியுள்ளதற்கான அட்டை,
குடும்ப அட்டை
ஆகியவை மனுவுடன் இணைக்கப்பட வேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் - ஆட்சேபணையுள்ள புறம்போக்குகளான நீர் வழி புறம்போக்கு, கோவில் புறம்போக்கு, மயான புறம்போக்கு, மந்தைவெளி ஆகியவற்றில் குடியிருந்து வருவோரிடம் மனுக்கள் வாங்கப்பட மாட்டாது.
ஆகவே, ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருவோர் மனுவுடன் மேற்கண்ட ஆவணங்களை இணைத்து, 10.09.2012 தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் மனுச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |