காயல்பட்டினத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்த்திடுமாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25.08.2012 அன்று அக்கட்சியின் சார்பில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், ஆணையர் அஷோக் குமார் ஆகியோரிடம் நகர முஸ்லிம் லீக் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இதுபோன்ற தண்ணீர் பற்றாக்குறை நேரங்களில் காயல்பட்டினத்தின் அப்போதைய பேரூராட்சி மற்றும் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்த அம்மனுவில், நடப்பு நகராட்சி அவற்றில் ஒன்றைக் கூட செய்யவில்லை என்றும், போர்க்கால அடிப்படையில் அவற்றை செய்திடுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கமளித்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆத்தூரிலிருந்து காயல்பட்டினம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்ட நாள் முதல் நகராட்சி சார்பில் இதற்காக போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பஞ்ச காலங்களில் நிலத்தடி நீரை பொதுமக்களுக்கு வினியோகிப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிலத்தடி நீரை முறையான சோதனைக்குட்படுத்தியே பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டுமென்று தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்னபிற பகுதிகளிலிருந்தும் நிலத்தடி நீரைப் பெறுவதற்கு அப்போது ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றையும் விரைந்து பரிசீலிப்பதாக நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். |