செய்தி எண் (ID #) 9024 | | |
சனி, ஆகஸ்ட் 25, 2012 |
காயல்பட்டினம் நகராட்சியைக் கண்டித்து முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5692 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய |
|
தண்ணீர் நிறுத்தப்பட்டு விடும் என்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அபாய அறிவிப்பைக் கண்டுகொள்ளவில்லை என்றும், 10 நாட்களுக்கு ஒருமுறை கூட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காததற்காகவும் காயல்பட்டினம் நகராட்சியைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் இன்று மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நகர துணைச் செயலாளர் அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், நகர துணைச் செயலாளர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, ஆர்ப்பாட்ட உரையாற்றினார்.
மழையின்றி வறட்சி காணப்படும் இத்தருணத்தில், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர மக்களுக்கு தண்ணீர் வழங்க நகராட்சி தவறி விட்டதாகவும், ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அவசர அவசரமாக லாரியில் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், இரண்டாம் பைப் லைன் திட்டத்தை, போதிய அனுபவமோ - கட்டமைப்போ இல்லாத நிலையில் நகராட்சியே எடுத்து செய்திட தீர்மானித்திருப்பது இத்திட்டத்தை பயனற்றதாக்கி விடும் என்று தெரிவித்தார்.
முந்தைய காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில் அப்போதிருந்தவர்கள் செய்த முயற்சிகள் இன்றைய நகராட்சியால் செய்யப்படவில்லை என்று அவர் மேலும் குற்றஞ்சாட்டினார். இக்குறைபாடுகள் விரைந்து சரிசெய்யப்பட்டு நகர மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகிக்கப்படாவிட்டால், நகராட்சி வளாகத்திற்கு முன்பாக மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பின்னர், நகராட்சி நிர்வாகத்திற்கெதிராக முழக்கங்கள் முழங்கப்பட்டது. நன்றியுரை - துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், முஸ்லிம் லீக் நகர மூத்த நிர்வாகிகளான ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி மொகுதூம் கண் ஸாஹிப், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, நகர நிர்வாகிகளான ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஆர்.பி.ஷம்சுத்தீன், ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், எம்.எச்.அப்துல் வாஹித் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
|