காயல்பட்டினம் நகர மக்கள் அனைவரது கல்வித் தகுதிகளையும் தனித்தனியே முழுமையாக சேகரித்திட புதிய செயல்திட்டம் வகுத்து செயல்படுத்த, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிகழ்முறை:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 22.08.2012 புதன்கிழமை இரவு 07.30 மணிக்கு, இக்ராஃ கூட்டரங்கில் நடைபெற்றது.இக்ராஃவின் துணைத்தலைவரும் - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தலைவருமான ஹாஜி குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இக்ராஃ துணைத் தலைவர்களான - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன், கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாங்காங் மாணவர் நலச் சங்கம் - கஸ்வா அமைப்பின் உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் ஹாஜி குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.
நிர்வாகியின் அறிக்கை:
அதனைத் தொடர்ந்து, இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள், கடந்த 23.06.2012 அன்று காயல்பட்டினம் - காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து இக்ராஃ கல்விச் சங்கம் நடத்திய “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை-2012” நிகழ்ச்சிகளுக்கான வரவு - செலவு கணக்கறிக்கை ஆகியவற்றை இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் சமர்ப்பித்தார்.
நன்கொடையாளர் விபரம்...
பின்னர் தொடர்ந்து பேசிய இக்ராஃ நிர்வாகி, நடப்பு கல்வியாண்டில் இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வகைக்கு ஜகாத் நிதிகளைத் தந்துதவியோர், இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அனுசரணை வழங்கியோர் பெயர் பட்டியலையும், அவர்களின் அனுசரணைத் தொகையையும் விவரித்தார்.
கல்வி உதவித்தொகை அனுசரணை தேவை...
மேலும் நடப்பாண்டிற்கான இக்ராஃ கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 55 மாணவ-மாணவியர் 01-07-2012 அன்று நடைபெற்ற நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் அதற்கு இதுவரை 32 அனுசரணை மட்டுமே கிடைத்துள்ளதாகவும், மீதமுள்ள 23 அனுசரணை உடனடியாக கிடைத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
ஜகாத் நிதி குறித்த விபரம்...
அடுத்து ஜக்காத் நிதி குறித்து விளக்கிய நிர்வாகி, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சில தன்னார்வலர்கள் தாமாகவே முன்வந்து இக்ராஃவில் ஜகாத் நிதிகளைத் தந்து சென்றதாகவும், அப்போது ரூபாய் 48,800 தொகை சேகரமானதாகவும், 2011ஆம் ஆண்டில் - (கடந்த ஆண்டு) ஜகாத் நிதி தந்தவர்கள் மற்றும் தரும் வாய்ப்புள்ள ஒரு சிலருக்கு முறைப்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த ஆண்டில் ரூபாய் 91,000 தொகை சேகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நடப்பு கல்வியாண்டிலும் இதே போன்று ஜகாத் நிதி திரட்ட இக்ராஃ மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, கடந்த ஆண்டுகளை விட பன்மடங்கு அதிகமாக -ரூபாய் 4,25,100 (நான்கு இலட்சத்து இருபத்தைந்தாயிரத்து நூறு) தொகை சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயில்வதற்காக இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு அவ்வகை நிதி மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், ஜகாத் நிதியைக் கொண்டு - ஜகாத் பெற்றிட தகுதியுள்ள மாணவ-மாணவியருக்கு பொறியியல் - மருத்துவம் - பட்ட மேற்படிப்புகள் - நர்ஸிங் - ஆசிரியர் பயிற்சிப் படிப்புகள் உள்ளிட்ட கல்விப் பிரிவுகளின் கீழ் பயில்வோருக்கே உதவிகள் வழங்கப்படுவதாகவும், நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையிலும் பொருளாதார நலிவு காரணமாக தம் படிப்பை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்த பல மாணவ-மாணவியரை இக்ராஃவே அடையாளங்கண்டு - அவர்களை விண்ணப்பிக்கச் செய்து, தேவையான உதவித்தொகைகளை, ஜகாத் நிதி நேர்காணல் குழு மூலம் நேர்காணல் செய்து வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிவில் சர்வீஸ் படிப்பில் மாணவ-மாணவியர் ஆர்வம்...
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் படிப்புகளுக்கு, இக்ராஃவும் - உலக காயல் நல மன்றங்கள் பலவும், கல்வி ஆர்வலர்கள் பலரும் பன்னெடுங்காலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி - உதவிகளையும் வழங்க ஆயத்தமாக உள்ளதாகத் தெரிவித்த பின்னரும் அதுகுறித்த ஆர்வம் காயல்பட்டினம் நகர மக்களிடையே ஏற்படவில்லை என்றும், எனினும் இம்முயற்சியை இக்ராஃ கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்த அவர்,
பொறியியல் நான்காமாண்டு பயின்று வரும் ஒரு மாணவரும், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்து வரும் மற்றொரு மாணவியும் தம் படிப்பு நிறைவுற்றதும் ஐ.ஏ.எஸ். பயின்றிட ஆர்வமாக உள்ளதாக இக்ராஃவிடம் தெரிவித்துள்ளதாகவும், ஒருவேளை அவர்கள் படிப்பில் சேரும் சூழல் ஏற்பட்டால், ஏற்கனவே இவ்வகைக்கு உதவுவதாக அறிவித்துள்ள அமைப்புகள் - இதற்காக இக்ராஃ அவர்களை அணுகும்போது குறித்த காலத்திற்குள் உதவித் தொகைகளை - அவர்களே நேரடியாகவோ அல்லது இக்ராஃ மூலமாகவோ வழங்குவதாக உறுதியளித்தால் அதன்படி செய்துகொள்ளலாம் என்றும், அதில் தாமதமேற்படும் சூழல் ஏற்பட்டால் இக்ராஃ மூலமே அவர்களுக்குத் தேவையான தொகையை வழங்கிடலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான், ஐ.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் படிப்புகளைக் கற்பதால் உள்ளூர் வட்டத்திற்குள்ளேயே பணி செய்யலாம் என்ற தவறான நினைப்பில் அம்மாணவர்கள் ஆர்வப்பட்டு விடக்கூடாது என்பதைக் கவனத்திற்கொண்டு,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தியா முழுவதும் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவது வழமை என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டு ஆர்வப்படுகின்றனரா என்பதை ஆய்ந்தறிந்த பின்னர் உதவி செய்வதே சிறந்ததாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.
அதற்கு விடையளித்த இக்ராஃ நிர்வாகி, சென்னையில் சிறப்பான முறையில் ஐ.ஏ.எஸ். குறித்த பயிற்சிகளை வழங்கி, பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கி வரும் இத்துறை தொடர்பான வல்லுநர்களை துவக்கமாக இம்மாணவ-மாணவியரைத் தொடர்புகொள்ளச் செய்து, இதுகுறித்த முழு விபரங்களை அறிந்துகொண்ட பின்னரே அவர்கள் இத்துறையில் பயில்வது குறித்து முடிவெடுப்பர் என்றும், அதன் பின்னர் இக்ராஃவோ - இதர அமைப்புகளோ உதவுவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த - ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன், இவ்வகைக்காக உதவுவது குறித்து தான் சார்ந்துள்ள கஸ்வா அமைப்பின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,எனவே இது குறித்த விபரங்களை இக்ராஃ கஸ்வாவுக்கு தெரிவிக்கலாம் என்றும், ஒருவேளை கஸ்வா இசைவு தெரிவித்தால் -இங்கு எதிர்பார்க்கப்படுவதைப் போல குறித்த காலத்தில் உதவித்தொகைகள் பயனாளிக்குச் சென்று சேர்ந்திட முழுக்கவனம் எடுக்கப்படலாம் என்றும், இக்கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட கருத்தே என்றும், கஸ்வாவுடன் பேசிய பின்னர் தரப்படும் கருத்துக்கள் மட்டுமே அமைப்பு ரீதியானது என்றும் தெரிவித்தார்.
நற்சேவை அமைப்புகளுக்கு நிதியுதவியளிக்கும் நிறுவனம் குறித்த விபரம்...
அடுத்து பேசிய இக்ராஃ நிர்வாகி, கல்விச் சேவைகளை தன்னலமற்று செய்து வரும் இக்ராஃ போன்ற அமைப்புகளுக்கு பெருந்தொகை நிதியுதவியளிக்கும் அமைப்பொன்று இயங்கி வருவதாகவும்- ஏராளமான நிறுவனங்களுக்கு அதன் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் - பெங்ளூருவில் பணிபுரியும் தீவுத்தெருவைச் சேர்ந்த சகோதரர் ஷேக் சுலைமான் என்பவர் தெரிவித்ததாகவும், அதுகுறித்து அவர் அளித்த விபரங்கள் அனைத்தும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், இந்த நிதியுதவியை இக்ராஃவிற்கும் கோரலாமா என்பது குறித்து கூட்டத்தில் முடிவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நடைமுறை சிக்கல், சட்ட சிக்கல் எதுவுமில்லையெனில் இதுபோன்ற நிதியுதவிகளைப் பெற்றிடுவதில் தவறேதுமில்லை என கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் - குறிப்பாக அனைத்துலக காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். அதனையே முடிவாக எடுத்துக்கொள்வதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அலுவலக இடமாற்றம்...
தொடர்ந்து பேசிய இக்ராஃ நிர்வாகி, இக்ராஃ தற்போது செயல்பட்டு வரும் 90, அலியார் தெரு என்ற முகவரியிலான இந்த அலுவலகத்தின் உரிமையாளர் தற்போது இடத்தைத் திரும்பக் கேட்பதாகவும், அவர் தந்த கால அவகாசமும் நிறைவடைந்து வருவதாகவும், எனவே விரைந்து செயல்பட்டு வேறிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதற்காக பல இடங்களைப் பார்வையிட்டு - பரிசீலித்து வருவதாகவும், எனவே இங்கே வந்திருப்பவர்களின் கவனத்திற்கு ஏதேனும் தென்பட்டால் தகவல் தருமாறும் தெரிவித்தார்.
இக்ராஃவிற்கு சொந்தக் கட்டிடம்...
இது ஒருபுறமிருக்க, இக்ராஃ தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களின் வேண்டுகோளின்படி - இக்ராஃவிற்கென சொந்தக் கட்டிடம் அல்லது சொந்த இடம் தேடப்பட்டு வருவதாகவும், இக்ராஃவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இடம் இருப்பதாக யாரேனும் தெரிந்திருந்தால் விரைவாகத் தெரிவிக்குமாறும், இதுகுறித்து உள்ளூர் இணையதளங்களின் மூலமும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இக்ராஃ உறுப்பினர் வகைகள்...
அடுத்து, இக்ராஃவின் உறுப்பினர்கள் வகை குறித்த விபரங்களை விளக்கிய நிர்வாகி, ஆண்டுக்கு ரூபாய் 300 சந்தா செலுத்தும் சாதாரண உறுப்பினர், ஒரேயொரு முறை ரூபாய் 15,000 செலுத்தும் ஆயுட்கால உறுப்பினர், ஒரேயொரு முறை ரூபாய் ஒரு லட்சம் செலுத்தும் புரவலர்கள் ஆகிய மூன்று வகைகளில் - அரசுப்பதிவு சட்ட விதிகளின்படி இக்ராஃவின் உறுப்பினர் வகை அமைந்துள்ளதாகவும், இதுவரை 377 பேர் சாதாரண உறுப்பினர்களாகவும்,
15 பேர் ஆயுட்கால உறுப்பினர்களாகவும் இணைந்துள்ளதாகவும், ஆயுட்கால உறுப்பினராக விருப்பம் தெரிவித்துள்ள சிலர் அதற்கான தொகையை செலுத்தி விட்டதாகவும், இன்னும் சிலரிடமிருந்து இனிதான் பெறப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ரூபாய் ஒரு லட்சம் செலுத்தி இக்ராஃவின் புரவலர்களாக இணைய இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார், இக்ராஃ தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் துவக்கத்தில் முன்வந்ததாகவும், ஆனால் புரவலர்களுக்கு கூட்டத்தில் வாக்குரிமை இல்லை என்ற சட்ட விதி காரணமாக, ஆயுட்கால உறுப்பினர்களாக இசைவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ரூபாய் 300 செலுத்தும் சாதாரண உறுப்பினர்கள் மற்றும் ரூபாய் 15,000 செலுத்தும் ஆயுட்கால உறுப்பினர்களின் எண்ணிக்கை கனிசமான அளவில் அதிகரித்தால், இக்ராஃவுக்கு சொந்தமாக இடம் வாங்கிட, சொந்தக்கட்டிடம் கட்டிட பேருதவியாக அமையும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகளை அனைவரும் செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஆவன செய்வதாக கூட்டத்தில் கலந்துகொண்ட காயல் நல மன்றத்தினர் சிலர் தெரிவித்தனர்.
ஆயுட்கால உறுப்பினர்களாக மூவர் ஆர்வம்...
இத்தகவலையடுத்து,
(1) ஹாஜி எம்.எம்.ஷாஹுல் ஹமீத்,
(2) எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம்,
(3) ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன்
ஆகிய மூவரும், ரூபாய் 15,000 தொகை செலுத்தி, இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராவதற்கு கூட்டத்திலேயே விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கருத்துப் பரிமாற்றம்:
அடுத்து, கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்து தெரிவிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.
நகர மக்களின் கல்வித்தகுதி குறித்த தகவல் சேகரிப்பு...
துவக்கமாக கருத்து தெரிவித்த இக்ராஃ துணைத்தலைவரும் - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் தலைவருமான ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன், காயல்பட்டினத்திலுள்ள பட்டதாரிகளை சரியான முறையில் கணக்கிட்டு, Professional Database ஒன்றை இக்ராஃ எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டுமென தெரிவித்தார்.
இதுகுறித்து நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது. நிறைவில், பட்டதாரிகள் மட்டுமின்றி -நகரிலுள்ள அனைத்து ஆண்கள் - பெண்களின் கல்வித் தகுதிகளையும் - பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பை வெளியிட்டு, இக்ராஃவின் தன்னார்வப் பெண்கள் பிரிவினர் (Ladies Volunteers) மூலம் திரட்டவும், இப்பணியை ஒருங்கிணைக்க,
இக்ராஃவின் மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது தலைமையில், அதன் துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளரும், இக்ராஃ உறுப்பினருமான கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகிய மூவர் மற்றும் இன்னும் இருவரைக் கொண்ட ஐவர் குழுவை நியமிக்கலாம் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வழிகாட்டு நிகழ்ச்சிகளுக்கு நிலையான செயல்திட்டம்:
அடுத்து கருத்து தெரிவித்த - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம், Career Guidance Programme என்பதை எப்போதாவது செய்வதை விட, அது ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக இக்ராஃவால் செய்யப்பட வேண்டும் என்றும், உதவித் தொகைகள் வழங்குவதை இக்ராஃவின் பல்வேறு திட்டங்களில் ஒன்றாக வைத்துக்கொண்டு, இதுபோன்ற வழிகாட்டு செயல்திட்டங்களையே முதன்மைத் திட்டமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதால் - உலகெங்கிலும் கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்புகளை காயல்பட்டினம் மக்கள் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள வாய்ப்பேற்படும் என்றும் கருத்து தெரிவித்தார்.
அதற்கு விடையளித்த இக்ராஃ துணைத்தலைவரும் - கத்தர் காயல் நல மன்றத் தலைவருமான எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம், இதுவரை இக்ராஃ செய்து வரும் இதுபோன்ற திட்டங்கள் அதன் சக்தி எல்லைக்குட்பட்டே செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது ஆலோசனை வழங்கப்படுவது போல் தொடர்ச்சியாகவும் - வலிமையாகவும் செய்திட, தற்போதைய இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களைப் போல பணி செய்யும் இன்னொருவர் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், அதற்கான நிதியாதாரம் குறித்தும் கவனம் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இக்கருத்தை வலியுறுத்திப் பேசிய இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், இத்திட்டத்தை வலிமையுடன் செய்திட இக்ராஃவிற்கு இருவேறு கருத்தில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி இம்தியாஸ்,வெறும் படிப்பு - வேலைவாய்ப்பு என்ற ரீதியில் மட்டுமே நம் சிந்தனைகள் முழுமையாக அமைந்துவிடக்கூடாது என்றும், வணிகத் துறையில் மக்களை ஆர்வப்படுத்தும் சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டும் என்றும், இக்ராஃதான் அதைச் செய்ய வேண்டுமென்பதில்லையெனினும் - இங்கு கருத்து சொல்வோர் இந்த அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அடுத்து பேசிய துபை காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஜி துணி உமர், நல்ல படிப்புகளைப் பயின்று பட்டம் பெற்ற பலரும் கூட இன்று சொந்தமாக தொழில் துறைகளில் காலூன்றி சிறப்புற செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அதனையடுத்து பேசிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஒய்.எம்.ஸாலிஹ், ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயின்றவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், குறிப்பாக தான் பணியாற்றி வரும் மக்கா நகரில் புதுப்புது ஹோட்டல்கள் உதயமாகி வருவதாகவும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயின்றவர்களுக்கு அடுத்த நான்காண்டுகளில் 4,000 முதல் 8,000 வேலைவாய்ப்புகள் வரை உள்ளதாகவும், இதற்காகக் கூட மாணவர்களை ஊக்கப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
தம்மாம் கா.ந.மன்றம் நடத்தும் அறிவியல் கண்காட்சிக்கு அழைப்பு...
தொடர்ந்து பேசிய ஹாஜி இம்தியாஸ், எதிர்வரும் 25.08.2012 அன்று காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நகர பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொள்ளும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும், அந்நிகழ்வில் அனைவரும் பார்வையாளர்களாகக் கலந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு...
அடுத்து பேசிய இக்ராஃ துணைத்தலைவரும் - கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், கத்தர் நாட்டிலும், இதர நாடுகளிலும் தற்போது நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், இக்ராஃவின் வேலைவாய்ப்புத் தகவலகப் பிரிவு விரைந்து செயல்பட்டு, அதற்கான தகுதியானவர்களை இனங்கண்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுத்திட ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதற்கு விடையளித்த இக்ராஃ நிர்வாகி, இதுபோன்ற வேலைவாய்ப்புகளுக்கு ஏற்கனவே அனுபவமிக்கோர் மட்டுமே கேட்கப்படுவதாகவும், காயல்பட்டினத்தில் - புதிதாக படித்து முடித்த மாணவர்கள் மட்டுமே அதிகளவில் உள்ளதாகவும் தெரிவிக்க, புதியவர்களுக்கும் நிறைய வேலைவாய்ப்புள்ளதாக எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தெரிவித்ததையடுத்து, அப்படியானால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த கல்விச் சேவைக்கு இக்ராஃவை வலுவாக அமைத்தது போன்று ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கும் ஒரு வலுவான அமைப்பு உருவாக்கப்படுவது குறித்து கருத்து கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த இக்ராஃ நிர்வாகி தர்வேஷ் முஹம்மது, இது குறித்து பல முறை பேசப்பட்டுள்ளதாகவும், எனினும் எதுவும் நடைபெறவில்லை எனவும்,இதனை நடைமுறையில் கொண்டு வரவேண்டுமெனில் அனைத்து காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள் ஒரு அமர்வில் ஒன்று கூடி விரிவாக பேசலாம் என்றும், அதற்கான ஏற்பாடுகளை இன்ஷா அல்லாஹ் இதே இக்ராஃ கூட்டரங்கில் நாளை ஏற்பாடு செய்து தருவதாகவும், அதில் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தலாம் என்றும் தெரிவிக்க, அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இவ்வாறு உறுப்பினர் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு அமைந்திருந்தது.
தீர்மானங்கள்:-
பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 -கட்டிட உரிமையாளருக்கு நன்றி:
இதுகாலம் வரை இக்ராஃ கல்விச் சங்கம் செயல்பட்டு வந்த 90, அலியார் தெரு என்ற முகவரியிலான கட்டிடத்தை, கல்விச்சேவைக்காக குறைந்த வாடகை அடிப்படையில் தந்துதவிய அதன் உரிமையாளர் பொறியாளர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
அலுவலகம் செயல்பட புதிய இடத்தை போர்க்கால அடிப்படையில் தேடிப் பெற்றிடவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012 நிகழ்ச்சிக்கு உதவியோருக்கு நன்றி:
23.06.2012 அன்று, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து இக்ராஃ கல்விச் சங்கம் நடத்தி முடித்துள்ள “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012 நிகழ்ச்சிக்கான செலவினங்களுக்கு பெரும் அனுசரணையளித்த பெட் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மற்றும் இணையனுசரணை அளித்த துபை காயல் நல மன்ற நிர்வாகத்திற்கு இக்கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3- கல்வி உதவித்தொகை அனுசரணையாளர்களுக்கு நன்றி:
இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை அனுசரணையளித்தோர், ஜகாத் நிதி மூலம் கல்வி உதவித்தொகை வழங்க அனுசரணையளித்தோர் அனைவருக்கும் இக்கூட்டம் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 4 - நற்சேவை அமைப்புகளுக்கான நிதியுதவி பெற விண்ணப்பித்தல்:
கல்வி -மருத்துவம் உள்ளிட்ட நற்சேவைகள் புரிந்திடும் அமைப்புகளுக்காக நிதியுதவி அளிக்கும் நிறுவனத்தில், சட்ட சிக்கல்கள் - நடைமுறை சிக்கல்கள் குறித்து முழுமையாக ஆய்ந்தறிந்த பின்னர் இக்ராஃவிற்கு நிதியுதவி கோரி விண்ணப்பிக்க இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 5 - ஆர்வலருக்கு நன்றி:
இக்ராஃவின் பணிகளில் இணைந்து செயல்பட ஆர்வம் தெரிவித்துள்ள காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளர் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களுக்கு இக்கூட்டம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் 6 - நகர மக்களின் கல்வித் தகுதி விபரங்கள் சேகரிப்பு:
காயல்பட்டினம் நகரின் அனைத்து மக்களது கல்வித் தகுதிகளை - பொதுமக்களுக்கு முறையான அறிவிப்புச் செய்து - இக்ராஃவின் பெண் தன்னார்வப் பிரிவினரைக் கொண்டு வீடு - வீடாக சென்று சேகரிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், இதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக, இக்ராஃவின் மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது தலைமையில், இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் மற்றும் இருவர் உட்பட ஐவர் குழுவை நியமிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறாக தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் நன்றி கூற, இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் இரவு 09:45 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில்,
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை,
தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) பொருளாளர் எம்.எச்.முஹம்மத் ஸாலிஹ்,
ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் (ஜக்வா) செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர்,
அதன் உறுப்பினர் எம்.ஏ.ஹஸன் நெய்னா,
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி பி.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஷாதுலீ,
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ்,
அதன் முன்னாள் தலைவரும், நடப்பு செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ,
அதன் உறுப்பினர் ஹாஜி என்.எம்.செய்யித் இஸ்மாஈல்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன்,
அதன் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ்,
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எச்.அப்துல் காதிர்,
அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக்,
துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி டி.ஏ.எஸ்.மீரா ஸாஹிப்,
எஸ்.செய்யித் அஹ்மது (மலேஷியா),
ஆகியோரும் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E.மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |