காயல்பட்டினத்தில் நிலவும் குடிநீர் வினியோகக் குறைபாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் ஊழியர் கூட்டம் 18.08.2012 சனிக்கிழமை மதியம் 03.00 மணியளவில் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்று வரும் வன்முறை நிகழ்வுகள், இது தொடர்பான உண்மைச் செய்திகள் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும் நிலை உள்ளிட்டவை குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
பின்னர், காயல்பட்டினத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நிறைவில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அஸ்ஸாம் நிவாரண நிதி:
அஸ்ஸாம் மாநிலத்தில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, ஏராளமான நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு, பெரும் பொருட்சேதம் ஆகியன காரணமாக கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவது என்ற கட்சித் தலைமையின் முடிவின்படீ. காயல்பட்டினத்திலும் பொதுமக்கள் கூடுமிடங்களில் நிதி சேகரித்து, கட்சித் தலைமை மூலம் அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - குடிநீர் வினியோகக் குறைபாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்:
காயல்பட்டினத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறையும், சில நேரங்களில் அதை விட கூடுதலான நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இக்குடிநீர் வினியோகத்திலுள்ள குறைபாடுகளைக் கண்டித்து 25.08.2012 சனிக்கிழமை மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணி:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நிலுவையிலுள்ள மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதில் அலட்சியம் காண்பிக்கும் தொடர்வண்டித் துறையைக் கண்டித்து, விரைவில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ரெயில் மறியல் போராட்டத்தை நடத்திடவும், இது தொடர்பான அனைத்துக் கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்தி இதுகுறித்து இறுதி முடிவு செய்திடுவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின்போது, நகரில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு, முஸ்லிம் லீக் மகளிரணியின் முன்னாள் தலைவரும், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அவர்களின் மனைவியுமான ஹாஜ்ஜா ஏ.எச்.எம்.ஜைனப் அவர்களின் முயற்சியால் நிதி சேகரிக்கப்பட்டு, முதல் தவணையாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது.
அத்தொகையை ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வழங்க, பயனாளியின் சார்பில் காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அதனைப் பெற்றுக்கொண்டார்.
நன்றியுரைக்குப் பின், ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்காவின் துஆ - ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட - நகர நிர்வாகிகளான ஹாஜி மொகுதூம் கண் ஸாஹிப், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஹாஜி ஏ.கே.மஹ்மூத் சுலைமான், பெத்தப்பா சுல்தான், ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஹாஜி அரபி ஷாஹுல் ஹமீத், ஹாஜி எஸ்.டி.கமால், எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், எம்.எச்.அப்துல் வாஹித் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார் |