காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில், நோன்புப் பெருநாளான 20.08.2012 அன்று - மத்ரஸாவின் முன்னாள் மாணவர் நோன்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி, இரவு 07.30 மணிக்கு நடத்தப்பட்டது.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
எஸ்.ஏ.அவ்லியா ஸாஹிப் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ - அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
(1) பொதுமக்களின் நன்கொடையையே காலமெல்லாம் எதிர்பார்க்கும் நிலையகற்றிட, மத்ரஸாவிற்கென வருமானம் தரத்தக்க சொத்துக்களை வாங்கல்
(2) மத்ரஸாவிற்கு ஃபோட்டோ காப்பி கருவி (ஜெராக்ஸ் மெஷின்) வாங்கல்
(3) ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் நீண்ட காலமாக ஆசிரியராகப் பணியாற்றும் ஆலிம் அவர்களது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக பொருளுதவி செய்தல்
(4) ஹிஃப்ழு மத்ரஸா மாணவர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், துவக்க கால தேவைக்கேற்ப கட்டப்பட்டு - தற்போது வசதிக்குறைவுடன் காணப்படும் ஹவ்லு (தொழுகைக்காக சுத்தம் செய்யுமிடம்) மற்றும் கழிப்பறைகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு, புதிதாக ஹவ்லு மற்றும் கழிப்பறை கட்டுதல்
ஆகிய கோரிக்கைகளை - முன்னாள் மாணவர்களின் இச்சங்கமத்தைப் பயன்படுத்தி முன்வைப்பதாக முதல்வர் தனதுரையில் தெரிவித்தார்.
இவற்றுள், மிகவும் அவசரமாகவும் - அவசியமாகவும் தேவைப்படும் ஹவ்ல் மற்றும் கழிப்பறை கட்டிடப் பணிகளை துவக்கமாக கையிலெடுத்து செயல்படுத்தலாம் என கூட்டத்தில் ஒருமனதாக கருத்து தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டது.
கட்டிடப் பணிகளுக்காக எதிர்பார்க்கப்படும் செலவினங்களுக்காக நன்கொடை அளிக்க விரும்புவோர்,
ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் (கைபேசி எண் +91 999 44 82 673), ஹாஜி என்.டி.ஷெய்கு மொகுதூம் (கைபேசி எண் +91 99765 28575) ஆகியோரைத் தொடர்புகொண்டு தமது நன்கொடைத் தொகையை அறிவிக்கலாம் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொறுப்பாளர்களான ஹாஜி எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் (ஜித்தா), ஹாஜி என்.டி.இஸ்மாஈல் (அல் ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸ்), ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜி எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் (ரியாத்), ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ (ரியாத்), எஸ்.கே.ஸாலிஹ், டாக்டர் பி.எம்.செய்யித் அஹ்மத் ஆகியோர் தம் மலரும் நினைவுகளை அனுபவ உரைகளாக அனைவரோடும் பகிர்ந்துகொண்டதுடன், மத்ரஸா நலத்திட்டங்களுக்கான தமது ஆலோசனைகளையும் வழங்கினர்.
நிறைவாக, ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
அதனைத் தொடர்ந்து, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் முகப்புப் பகுதி வெளி வளாகத்தில் நின்றவாறு, மத்ரஸா முதல்வர் மற்றும் முன்னாள் - இந்நாள் மாணவர்களும் - பொறுப்பாளர்களும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[செய்தி திருத்தப்பட்டது @ 00:31/24.08.2012] |