வி-யுனைட்டெட் நடத்திய நகரளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் காவாலங்கா அணியினர் முதற்பரிசைத் தட்டிச் சென்றுள்ளனர். இதுகுறித்து, வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனர் அலீ ஃபைஸல் (ஹாங்காங்) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
விளையாட்டுத் துறையில் காயலர்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் துவக்கப்பட்டு, இறையருளால் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் எமது வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், ஹாங்காங்கிலும், காயல்பட்டினத்திலும் இதுவரை கால்பந்து மற்றும் க்ரிக்கெட் போட்டிகள் பல்வேறு சுற்றுப் போட்டிகளாக சிறப்புற நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
எமது அடுத்த முயற்சியாக, காயல்பட்டினத்திலுள்ள பல்வேறு சங்கங்களில் காயலர்கள் ஆர்வத்துடன் விளையாடும் கேரம் விளையாட்டை ஒரு சுற்றுப்போட்டியாக நடத்தி, அதில் நகரின் அனைத்துப் பகுதியினரையும் பங்கேற்கச் செய்ய திட்டமிடப்பட்டது... துவக்கத்தில் ரமழான் காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டு, பின்னர் மக்களின் வணக்க வழிபாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில், நோன்புப் பெருநாள் நிறைவுற்ற பின் இச்சுற்றுப்போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், 21.08.2012 செவ்வாய்க்கிழமையன்று காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் மன்பஉல் பரக்காத் சங்கத்தில் சுற்றுப்போட்டி நடைபெற்றது.
ஓரணிக்கு இருவர் விளையாட வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், 48 ஆட்டக்காரர்களைக் கொண்ட மொத்தம் 24 அணிகள் விளையாடின. அவ்வணிகளிலிருந்து துவக்கமாக நாக் - அவுட் முறையில் 12 அணிகள் தேர்வாயின. மீண்டும் நாக்-அவுட் முறையில் 06 அணிகள் தேர்வாயின.
இந்த ஆறு அணிகளுக்கிடையில், மறுநாள் 22.08.2012 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் நான்கு அணியினர் பரிசுக்குரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு காயல்பட்டினம் காழி அலாவுத்தீன் அப்பா தைக்கா சங்கத்தைச் சேர்ந்த ஹாஜி வேனா முஹம்மத் லெப்பை தலைமை தாங்கினார். மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, முதல் நான்கிடங்களைப் பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அலீ - சபீர் ஆகியோரைக் கொண்ட காவாலங்கா அணி முதலிடத்தைப் பெற்றது.
ஹுஸைன் - ஸல்மான் ஆகியோரடங்கிய ரெட் ஸ்டார் சங்க அணி இரண்டாமிடத்தைப் பெற்றது.
அஸ்லம் - அஹ்மத் ஆகியோரடங்கிய மன்பஉல் பரக்காத் சங்க அணி மூன்றாமிடத்தைப் பெற்றது.
மரைக்கார் என்ற குரு - முனாஃப் ஆகியோரடங்கிய ஹாஜியப்பா அணி நான்காமிடத்தைப் பெற்றது.
செய்யித் - அபூபக்கர் ஆகியோரடங்கிய மன்பஉல் பரக்காத் சங்க அணி ஐந்தாமிடத்தையும், ஜவஹர் - ஷேக் இப்றாஹீம் ஆகியோரடங்கிய வி-யுனைட்டெட் அணி ஆறாமிடத்தையும் பெற்றது.
அடுத்து, தொடர்ச்சியாக ஆறு காய்களை காலி செய்த ஹாஃபிழ் அப்துல் கரீம் ஃபாயிஸ், சிறப்பாக விளையாடிய செய்யித் மற்றும் அபூபக்கர் ஆகிய வீரர்களுக்கு சிறந்த வீரர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் 11 வயதேயான மாணவர் - ரெட் ஸ்டார் சங்கத்தைச் சேர்ந்த மீரா ஸாஹிபுக்கு வளரும் இளம் நட்சத்திர வீரருக்கான சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசை, ஹாஜி எம்.ஏ.கிழுறு முஹம்மத் வழங்கினார்.
பின்னர், சிறப்பு விருந்தினருக்கும், ஒத்துழைப்பளித்தோருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
அனைத்துப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கேரம் விளையாட்டு ஆர்வலர்கள் ஆவலுடன் பார்வையிட்டனர்.
போட்டி ஏற்பாடுகளை, நவ்ஃபல் (டாஸ்), சொளுக்கு முஹம்மத் தம்பி, எம்.பி.எஸ்.இஸ்மாஈல், மன்பஉல் பரக்காத் சங்கத்தைச் சேர்ந்த முஹம்மத் நூஹ் என்ற ஹாஜி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இவ்வாறு, வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனர் அலீ ஃபைஸல் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
நவ்ஃபல்
மற்றும்
சொளுக்கு முஹம்மத் தம்பி |