காயல்பட்டினம் கடற்கரையில், 24.08.2012 அன்று (நேற்று முன்தினம்) அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் பிணம் ஒதுங்கியிருந்தது. பிணமான அவர் மதுரையைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
காயல்பட்டினம் கடற்கரையில் கடந்த 24ஆம் தேதி மாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கரை ஒதுங்கியது. பிணத்தைக் கைப்பற்றிய ஆறுமுகநேரி காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.. இறந்தவரின் சட்டை காலரில் மதுரை விலாசம் இருந்ததையடுத்து ஆறுமுகநேரி காவல் துறையினர் மதுரையில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில், அவர் மதுரை டி.வி.எஸ். லட்சுமி நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (60) என்பது தெரிய வந்துள்ளது.
கிருஷ்ணமூர்த்தி மதுரை டி.வி.எஸ். நிறுவனத்தில் க்ளெர்க் ஆக பணியாற்றியுள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட அவர் கட்நத 9 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அதன் பிறகு அடிக்கடி மதுரை, திருச்செந்தூர் கோயில்களுக்குச் சென்று வருவது வழக்கமாம்.
இதே போன்று கடந்த வாரம் திருச்செந்தூருக்கு வந்தவர் வீடு திரும்பாதது கண்டு அவரது மனைவி புவனேஸ்வரி மதுரை சுப்பிரமணியபுரம் சி 2 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு ஆறுமுகநேரி காவல் துறையினர் தகவல் தெரிவித்திருந்ததையடுத்து, காயல்பட்டினம் கடற்கரையில் இறந்து கிடந்தவர் கிருஷ்ணமூர்த்திதான் என தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, புவனேஸ்வரி மற்றும் உறவினர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடலை பெற்றச் சென்றனர்.
புவனேஸ்வரி மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள டி.வி.எஸ். பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். |