தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் 2ம் கட்டமாக தூத்துக்குடி, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்விளையாட்டரங்கங்கள் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
ஆரோக்கியமுள்ள வருங்கால மனித வளத்தினை உருவாக்குவதில் விளையாட்டுத்துறை பெரும் பங்கு வகிக்கின்றது. கல்வி ஒருவரது அறிவுத் திறனை
வளர்க்கும்; அதே நேரத்தில் விளையாட்டு அவரது உடல் நலத்தைக் காக்கும். எனவே கல்வியும், விளையாட்டும், ஒவ்வொருவருக்கும் இரு கண்களாகும். எனவே தான் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள இளைஞர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் விளையாட்டு விடுதிகள் துவக்குதல், தினப் பயிற்சி திட்டத்தின் மூலம் வீரர்களுக்கு முழுமையான பயிற்சி அளித்தல், பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதற்காக பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்கங்களை அமைத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
மாவட்டங்களில் இளைஞர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வசதியாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாகவும் 20 மாவட்டங்களில், 30 கோடி ரூபாய் செலவில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்கள். அந்தவகையில்,
முதற்கட்டமாக சென்ற ஆண்டு ஸ்ரீரங்கம், கோயம்புத்தூர், விழுப்புரம் காஞ்சிபுரம் மற்றும் அரியலூர் ஆகிய 5 இடங்களில், தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தம் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் உள் விளையாட்டரங்கங்கள் அமைக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, தற்போது, இரண்டாம் கட்டமாக, 2012-13 ஆம் ஆண்டில் நாகர்கோவில், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் பார்வையாளர்களுக்கான இருக்கை வசதி, மரத்தாலான தரைத்தளம் மற்றும் மின்னொளி வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய உள் விளையாட்டரங்கங்கள் தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில்
அமைப்பதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த நடவடிக்கைகளினால், தமிழகத்தில் விளையாட்டில் அதிக ஆர்வமுள்ளவர்கள் கண்டறியப்பட்டு, வருங்காலத்தில் தமிழகத்திலிருந்து சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் அதிக அளவில் விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள் பங்கு பெற வழிவகை ஏற்படும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9. |