காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TAMILNADU WATER SUPPLY AND DRAINAGE SYSTEM)
நிர்வாக இயக்குனர் (MANAGING DIRECTOR) பி. ஏகாம்பரம் IAS - ஐ சென்னையில் மே 16 அன்று சந்தித்து -
நகரில் தற்போது மேற்கொள்ளப்படும் பல நாட்களுக்கு ஒரு முறையிலான குடிநீர் விநியோகம் குறித்து விளக்கினார். அதனை தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் வழங்கிய பரிந்துரைகளை முறையாக - நிர்வாக
இயக்குனர் பி. ஏகாம்பரம் IAS - தற்போது நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - க்கு அனுப்பியுள்ளார். அதில் அடங்கியுள்ள ஐந்து முக்கிய
பரிந்துரைகள் நகரில் ஆழமாக பதிந்துள்ள இந்த பிரச்சனையினை மிக தெளிவாக உணர்த்துக்கின்றன.
(1) சட்டப்பூர்வமற்ற இணைப்புகள்
நகரில் பல இல்லங்களுக்கு சட்டப்பூர்வமற்ற இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் வைக்கும் குற்றச்சாட்டு. சட்ட விரோத செயல்
இது என்பதால் இதன் எண்ணிக்கையை எவரிடமும் நாம் அதிகாரப்பூர்வமாக கேட்டு அறிந்துக்கொள்ள இயலாது. முதலில் இது ஏன் ஏற்படுகிறது என
அலசி, பின்னர் அதற்கான பரிகாரங்களை காணலாம்.
காயல்பட்டினத்தை பொறுத்துவரை முறையாக புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பம் செய்தால் யாரும் இணைப்பு பெற காத்திருக்க தேவையில்லை. கேட்டவுடன்
வழங்கும் நிலையே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை - குடிநீர் திட்டம் அமைக்கப்படும் போது எத்தனை இணைப்புகள் திட்டமிடப்பட்டதோ,
அத்தனை இணைப்புகள் வரை தான் புது இணைப்புகள் வழங்க வேண்டும்.
ஆனால் இந்த விதிமுறை - ஒரு அரசாணையின் அனுமதிப்படி தளர்த்தப்பட்டது. ஆகவே - இன்று நகரில் புது குடிநீர் இணைப்புகள் பெற
விரும்புவோர் அதற்கான இருப்புத்தொகையான ரூபாய் 5,100 செலுத்தி, ரோடு தோண்ட, இணைப்பு வழங்க ஆகும் செலவான சென்டேஜ்
தொகையையும் செலுத்தி (இது வேறுப்படும்), வீடுகள் வரை அமைக்கப்படும் குழாய்க்கான பணத்தினை செலுத்தி இணைப்பு பெறலாம். இதற்கான ஒரு
முறை செலவு சுமார் ரூபாய் 10,000 வரை ஆகும். மேலும் மாத கட்டணமாக ரூபாய் 50 என ஆண்டுக்கு ரூபாய் 600 கட்டவேண்டும். நகராட்சிக்கு
இத்தொகையை செலுத்த விரும்பாதவர்களே - சட்டப்பூர்வமற்ற இணைப்புகளை பெற முயல்கின்றனர்.
இந்த சட்டப்பூர்வமற்ற இணைப்புகளை - நகராட்சி ஊழியர்களின் உதவியில்லாமல் பெறுவது கடினம். அதிகாரப்பூர்வமாக ஆகும் செலவில் சிறு பங்கை
லஞ்சமாக வழங்கி, வாழ்நாள் முழுவதும் இலவசமாக தண்ணீர் - இது போன்ற இணைப்புகள் மூலம் பெறப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த குற்றச்சாட்டினை முழுவதுமாக யாரும் மறுக்காவிட்டாலும், இது போன்ற இணைப்புகள் நகரில் எத்தனை உள்ளன என்பதில் தெளிவான பதில்
இல்லை.
அதிகாரப்பூர்வமாக நகரில் 8,200 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நகரில் சுமார் 12,000 இல்லங்களுக்கு வீட்டு வரி விதிக்கப்படுகிறது.
அதாவது - குடிநீர் இணைப்புகள் பெற்றவரை விட - வீட்டு வரி கட்டுவோர் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் அதிகம். வீட்டு வரி கட்டுவோர்
விபரத்தையும், குடிநீர் இணைப்புகள் பெற்றுள்ளோர் விபரத்தையும் சரிபார்த்தால் - இதற்கு ஒரு விடை கிடைக்கலாம். நகரில் - மின்சார இணைப்பு
பெற்றுள்ளவர் பட்டியலையும் இதற்கு பயன்படுத்தலாம்.
(2) பம்பிங் மெயின் குழாய் மூலம் - இல்லங்களுக்கும், பிறருக்கும் வழங்கப்படும் - குடிநீர்
இணைப்புகள்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இரண்டாவது பரிந்துரை - பம்பிங் மெயின் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது குறித்து. இதுபற்றி விபரமாக
காணுவதற்கு முன் - நகரில் அமைந்துள்ள குடிநீர் விநியோக முறையை சிறிது காண்போம்.
நகருக்கு மேல ஆத்தூரில் இருந்து 300 mm அளவு (சுமார் 12 இஞ்ச்) குழாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. காயல்பட்டினம் பைபாஸ் சாலையின்
பெரும் பகுதி வரை - இந்த குழாய் 12 இஞ்ச் அளவிற்கே வருகிறது. பின்னர் இது 8 இஞ்சாக சுருங்குகிறது.
நகரில் முதலில் அமைக்கப்பட்ட தொட்டிகளான நகராட்சி வளாக தொட்டி (4 லட்சம் லிட்டர் கொள்ளளவு), புது பேருந்து நிலைய தொட்டி (3 லட்ச
லிட்டர் கொள்ளளவு), அப்பாபள்ளி தொட்டி (2 லட்ச லிட்டர் கொள்ளளவு), தீவு தெரு தொட்டி (2 லட்ச லிட்டர் கொள்ளளவு) ஆகியவற்றுக்கு -
நேரடியாக 8 இஞ்ச் குழாய்கள் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு தொட்டிகளுக்கும் செல்லும் - 8 இஞ்ச் குழாய்கள் மூலம், நகரில்
உள்ள மீதி 15 தொட்டிகளுக்கும், புதிதாக 3 இஞ்ச குழாய்கள் அமைத்து தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இதுவே பம்பிங் மெயின் குழாய் எனப்படுவதாகும். இந்த குழாய்கள் மூலம் குடிநீர் தொட்டிகளுக்கு தான் குடிநீர் ஏற்றவேண்டும். தனி நபர்களுக்கு
இணைப்புகள் வழங்கக்கூடாது.
முழுமையாக குடிநீரை தொட்டியில் ஏற்றிவிட்டு, திறந்து விடப்படும் தண்ணீர் - தெருக்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் வழியாக ஒவ்வொரு
இல்லத்திற்கும் செல்லும். ஒவ்வொரு வீட்டிற்கும் 0.5 இஞ்ச் அளவில் அல்லது - குழாயில் இருந்து 100 அடிக்கும் கூடுதல் தூரத்தில் உள்ள
இல்லங்களுக்கு 0.௦75 இஞ்ச் அளவிலும் உள்ள குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
இதில் என்ன முறைக்கேடு நடக்கிறது?
பம்பிங் மெயின் குழாய் தண்ணீர் - மேல ஆத்தூரில் இருந்து அதிவேகமாக வருவதாகும். இதில் இணைப்பு பெற சட்டம் அனுமதி வழங்கவில்லை.
இருப்பினும் இதன்மூலம் இணைப்பு பெறுபவர்கள் - மேல ஆத்தூரில் தண்ணீர் திறந்து விடப்ப்படும்போதே தண்ணீர் பெறுகின்றனர். தொட்டிகளில்
ஏற்றப்படுவதற்கு முன்னர் - இவர்களின் இணைப்புகளுக்கு தண்ணீர் செல்கிறது. இது போன்ற இணைப்புகள் நகரில் நிறைய உள்ளன.
பைபாஸ் சாலையில் இருந்து - அரசு மருத்துவ மனைக்கு - 1 இஞ்ச் குழாய் மூலம், பம்பிங் மெயின் இணைப்பில் இருந்து, மீட்டர் பொருத்தாமல்
தண்ணீர் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது போன்று நகரில் எத்தனை இணைப்புகள் உள்ளன என்பதை கண்டறிய வேண்டும்.
(3) பம்ப்செட் மூலம் அதிக அளவில் குடிநீர் உரியப்படுவது
நகரில் பல குடிநீர் இணைப்புகளில் - மோட்டார் பொருத்தியே உள்ளன. அதற்கு ஒவ்வொருவரும் ௦ வெவ்வேறு காரணங்களை கூறுகின்றனர். அடுத்த
வீட்டுக்காரர் வைத்துள்ளார். நாங்கள் வைக்கவில்லை என்றால் எங்களுக்கு குடிநீர் கிடைக்காது என்று ஒரு சிலர் கூறுகின்றனர். அடுத்த சிலர் -
நாங்கள் எங்கள் குடிநீர் தேவைக்குமட்டும் தண்ணீர் எடுத்துக்கொள்கிறோம், குளியலுக்கோ, தோட்டத்திற்கோ அதனை பயன்படுத்தவதில்லை என
கூறுகின்றனர். வேறு சிலர் - வயதானவர் இருக்கும் இல்லங்களில் - பம்ப் அடித்து தண்ணீர் பெறுவது கடினம் எனவும் தங்கள் செயலை
நியாயப்படுத்துகின்றனர்.
ஒரு சிலர் நியாயமான அளவில் - மோட்டார் பொருத்தி தண்ணீர் உறுஞ்சுகின்றனர் என நகரில் மோட்டார் அனுமதிக்கப்பட்டால் - அநியாயமான
அளவில் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறுஞ்சுபவர்களை யாரும் தனியாக அடையாளம் காண இயலாது. இது குறித்து நகராட்சி முன்னெச்சரிக்கை
வெளியிட்டும், சில நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஆனால் ௦ இதில் முன் மாதிரியாக இருக்க வேண்டிய சில நகர் மன்ற உறுப்பினர்கள்
இல்லத்திலேயே - மோட்டார் இணைப்புகள் உள்ளன என்பது வருத்தம் தரக்கூடிய தகவலாகும். மோட்டார் பயன்படுத்தும் ஒரு பெண் உறுப்பினர் -
சமீபத்தில் இதனை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் கையெழுத்து வழங்கிய வார்டு மக்களை மிரட்டிய சம்பவமும் நடந்துள்ளது.
நகர்மன்றம் தீவிரமாக முயற்சி எடுத்து - பெருவாரியான மோட்டார் இணைப்புகளை துண்டித்தால், பெரும் அளவில் - குடிநீர் விநியோகத்தில் -
அனைவரும் மாற்றம் காணமுடியும்.
(4) குடிநீர் தேக்கங்கள் (SUMPS) அமைத்து இதர 15 குடிநீர் தொட்டிகளுக்கும் குடிநீர் வழங்குதல்
மேல ஆத்தூரில் இருந்து அனுப்பப்படும் தண்ணீரின் அழுத்தம் - முதல் நான்கு தொட்டிகளுக்கு தான் போதுமானது என தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியம் தெரிவித்துள்ளது.
எஞ்சிய தொட்டிகளுக்கு முறையாக தண்ணீர் அனுப்ப காயல்பட்டினத்திலேயே (4 தொட்டிகளுக்கும் அருகில்) நீர்
தேக்கங்கள் (SUMPS) அமைத்து - பம்ப்செட் மூலம், இதர 15 தொட்டிகளுக்கும் போதிய அழுத்தத்தில் தண்ணீர் அனுப்பலாம் என அந்த அதிகாரிகள்
கூறியுள்ளனர்.
நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் - எந்தவித திட்டமும் இல்லாமல், சட்டமன்ற உறுப்பினர் நிதி போன்ற நிதிகள் மூலம்
உருவாக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 15 தொட்டிகளில் 2 இன்னும் செயல்புரிய துவங்கவில்லை. அதில் 11 தொட்டிகள், தலா 60,000 லிட்டர்
கொள்ளளவும், ஒன்று 30,000 லிட்டர் கொள்ளளவும், ஒன்று 10,000 லிட்டர் கொள்ளளவும் கொண்டது. செயல்புரிய துவங்காமல் இருக்கும்
ஜலாலிய தொட்டி 2 லட்ச லிட்டர் கொள்ளளவு கொண்டது. மக்தூம் பள்ளி தொட்டி 1 லட்ச லிட்டர் கொள்ளளவு கொண்டது.
இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் நிறைவுற்ற நிலையில் - விநியோகத்தை மேம்படுத்த நீர் தேக்கங்களுக்கு என நகர்மன்றம் அனுமதி
வழங்குமா என்பது சந்தேகமே. இருப்பினும் - இந்த பிரச்சனையை சிக்கனமான முறையில் தீர்க்க வேறு வழி உள்ளதா என ஆராய வேண்டும்.
(5) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் காயல்பட்டினத்திற்கு வழங்கும் தண்ணீரை அளவிட மீட்டர்
பொருத்துவது
காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள் - குடிநீர் வடிகால் வாரியம் கூறும் அளவை விட - 3 - 5 லட்ச லிட்டர் அளவிற்கு குறைவாகவே தண்ணீர் வருவதாக பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். உண்மை நிலையை அறிந்துக்கொள்ள நகர எல்லையில் மீட்டர் அறை நிறுவப்பட்டது, வழக்கு ஒன்று காரணமாக செயல்புரியாமல் இருந்தது. தற்போது வழக்கில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருப்பதால், இன்னும் ஒரு மாதத்தில் - நவீன மீட்டர் பொருத்தப்பட்டு செயல்புரிய துவங்கும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மீட்டர் செயல்புரிய துவங்கினால், குடிநீர் விநியோகம் குறித்த விவாதத்தில் - ஓரளவு தெளிவு பிறக்கும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அனுப்பவதாக கூறும் அளவை விட குறைந்த அளவில் தண்ணீர் வருவதாக - காயல்பட்டினத்தில் உள்ள மீட்டர் காண்பித்தால், மீட்டர் அறைக்கு முந்தைய இடத்தில உள்ள குழாயில் தான் பிரச்சனை என அறியலாம். இரண்டு மீட்டர்களும் சமமாக காண்பித்தால், நகர விநியோகத்தில் தான் குளறுபடி உள்ளது என முடிவுக்கு வரலாம்.
Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 3:20 pm / 9.9.2012 |