சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுவில் - 2011ஆம் ஆண்டில், பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று, தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், இக்ராஃ கல்விச் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாவதற்கு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிகழ்முறை:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 07.09.2012 வெள்ளிக்கிழமையன்று 20.00 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் - ஹாஃபிழ் இஸ்மாஈல் கிராஅத்துடன் துவங்கியது.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், தமது இடையறாத வேலைப்பளுவுக்கிடையிலும் குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தமைக்காக அனைவரையும் வாழ்த்தி வரவேற்பதாகவும்,
குறிப்பாக - இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட - ஹாங்காங் வாழ் காயலர் எஸ்.எச்.அபுல் ஹஸன், கடந்த 2011ஆம் ஆண்டில், பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று, தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் ஆகியோரையும், வேலைவாய்ப்பு சிங்கப்பூர் வந்துள்ள காயலர்களையும் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை பொறுப்பேற்று செய்த உறுப்பினர் வி.எம்.எம்.அப்துல்லாஹ் சிற்றுரையாற்றினார். மன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் கூடிய ஒருமித்த ஒத்துழைப்பு காரணமாக இம்மன்றம் கையிலெடுக்கும் அனைத்துத் திட்டங்களும் இறையருட்கொண்டு வெற்றி பெற்று வருவதாகவும், காயல்பட்டினத்திலுள்ள - நிராதரவான - உழைக்கவியலாத - ஏழைக் குடும்பத்தினருக்காக மன்றத்தால் வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய சமையல் பொருட்களுதவித் திட்டம், இதர காயல் நல மன்றங்களையும் அதுபோன்று செய்திட தூண்டியிருப்பது அதற்கொரு சான்று என்றும் தெரிவித்தார்.
புதியோர் அறிமுகம்:
பின்னர், வேலைவாய்ப்பு தேடி சிங்கை வந்துள்ள - காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் முஹம்மத் இஸ்மாஈல், அப்பாபள்ளித் தெருவைச் சேர்ந்த ஹபீப் முஹம்மத் ஆகியோர் கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அவர்கள் வெகு விரைவில் தமது கல்வித் தகுதிக்கேற்ற தகுந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றிட உறுப்பினர்கள் அனைவரும் உதவிட வேண்டுமென கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
செயலரின் - கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் - அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார்.
கடந்த ரமழான் மாதத்தில், ஏழை - எளியோருக்கு உதவிடும் நோக்குடன் தமது ஜகாத் நிதியை மன்றத்திற்குத் தந்துதவியோர், இதர மனிதாபிமான உதவித் திட்டங்களுக்காக நன்கொடைகள் வழங்கியோர் ஆகிய அனைத்து உறுப்பினர்களுக்கும் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பொருளாளரின் வரவு-செலவு கணக்கறிக்கை:
பின்னர், மன்றத்தின் இன்று வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை கூட்டத்தில் சமர்ப்பிக்க, குறுக்கு விசாரணைகளுக்குப் பின் கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
மன்றத்தின் கடந்த காலாண்டுக்கான நிதியறிக்கையையும் விஞ்சி உதவிகள் வழங்கியமைக்காக மன்ற உறுப்பினர்களை மனதாரப் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார். கடந்த ஓராண்டு காலத்தில், பல்வேறு வழிகளில் மன்ற உறுப்பினர்கள் வழங்கிய உதவித் தொகைகளைப் பட்டியலிட்டு விவரித்த அவர், நிலுவையிலுள்ள சந்தா தொகைகளை மன்ற உறுப்பினர்கள் விரைந்து வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.
நலத்திட்ட உதவியாக ரூ.4,35,000:
அடுத்து, பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் - இம்மாதம் 03ஆம் தேதியன்று - மன்றத்தின் விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழுவால் பரிசீலிக்கப்பட்ட பின்னர் நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட - இறுதி செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் உள்ளிட்ட அறிக்கை குறித்து கூட்டத்தில் விவரிக்கப்பட்டதோடு, அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியுதவித் தொகையை மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வாசிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
கல்வி - மருத்துவம் - இதர உதவிகள் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களுக்காக சுமார் 4,35,000 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி மூலம் அவை பயனாளிகளுக்கு விரைவில் வினியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொழில்முறை பட்டப்படிப்பிற்கு உதவல்:
தொழில் முறை பட்டப்படிப்பிற்காக (Professional Courses) தகுதியுள்ள மாணவர்களுக்கு - தேவைப்படும் பொருளாதாரத்தை மன்றத்தின் சார்பில் முழுமையாக வழங்குவது குறித்து கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. அதுகுறித்த கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், தகுந்த நேரத்தில் இதுகுறித்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இக்ராஃவில் ஆயுட்கால உறுப்பினராதல்:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாகுமாறு உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் ஊக்கமளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் ஆகியோர் ஆயுட்கால உறுப்பினர்களாவதற்கு கூட்டத்தில் துவக்கமாக விருப்பம் தெரிவித்தனர்.
மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக இசைவு தெரிவிப்பதன் மூலம், மன்றச் செயலாளருடன் இணைந்து அனைவரும் இக்ராஃவில் தம்மை ஆயுட்கால உறுப்பினர்களாகப் பதிவு செய்திடுமாறு மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் பொதுக்குழுவில் பங்கேற்பு:
சிங்கப்பூரிலுள்ள இந்திய முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான Federation of Indian Muslims - FIM தனது பொதுக்குழுக் கூட்டத்தை இம்மாதம் 15ஆம் தேதி நடத்தவுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, அதில் சிங்கை காயல் நல மன்றத்தின் பிரதிநிதிகளாக மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் ஆகியோரை அக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்திட செயற்குழு இசைவு தெரிவித்தது.
ஒருங்கிணைந்த மருத்துவ உதவித்திட்டம் “ஷிஃபா”:
அண்மையில் தான் தாயகம் சென்றபோது நடைபெற்ற நகர்நலன் தொடர்பான நிகழ்வுகளில் தான் பங்கேற்றமை, ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம் “ஷிஃபா” ஆகியன குறித்து மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை கூட்டத்தில் விவரித்தார்.
“ஷிஃபா”வினது அட்ஹாக் குழுவின் விரிவான செயல்திட்ட அறிக்கை பெறப்பட்ட பின்னர் இதுகுறித்து விரிவாக கலந்தாலோசித்து முடிவெடுப்பதென கூட்டம் தீர்மானித்தது.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நாள் - இடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் தெரிவிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பழைப்பாளர் உரை:
கூட்டத்தை முழுமையாக அவதானித்த சிறப்பழைப்பாளர் எஸ்.எச்.அபுல்ஹஸன், கட்டுக்கோப்பாகவும் - கண்ணியமான முறையிலும் - நிதானமாகவும் - அமைதியாகவும் இக்கூட்டத்தில் செய்யப்பட்ட விவாதங்கள் தன்னை பெரிதும் கவர்ந்துள்ளதாகவும், தற்போது இம்மன்றம் செய்து வரும் மக்கட்சேவைகளையும் தாண்டி இன்னும் பல வெற்றிகளைப் பெற்றிட வாழ்த்திப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
சாதனையாளர் அறிமுகம்:
பின்னர், மற்றொரு சிறப்பழைப்பாளரான - 2011ஆம் ஆண்டின் ப்ளஸ் 2 சாதனையாளர் ஏ.எச்.அமானுல்லாஹ்வை கூட்டத்தில் அறிமுகப்படுத்திப் பேசிய மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், காயல்பட்டினத்தின் மாணவ சமுதாயத்திற்கு இவர் ஒரு அழகிய முன்மாதிரி என்று புகழ்ந்துரைத்ததுடன், அவர் தேர்ந்தெடுத்துள்ள மேற்படிப்புத் துறையில் உச்ச நிலை நிபுணத்துவம் பெற்று சிறந்தோங்கி, சமூகத்திற்கு நற்சேவையாற்றிட வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.
நகர்மன்ற நடவடிக்கைகளை சீர் செய்ய வேண்டுகோள்:
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அண்மைக்கால நடவடிக்கைகளை மன்றம் கவலையுடன் அவதானித்து வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுடன், மன்றத் தலைவர் - துணைத்தலைவர் - உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நகர்நலனை மட்டுமே நோக்கமாகக் கருதி செயல்படுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்வதாகவும், அதற்கு வல்ல அல்லாஹ் துணை புரிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த செயற்குழு ஒருங்கிணைப்பாளர்கள்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ, பி.எஸ்.எம்.அப்துல் காதிர் ஆகிய உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
விவாதிக்க வேறம்சங்கள் இல்லா நிலையில், 21.15 மணிக்கு, ஹாஃபிழ் எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீயின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவுணவாக சிக்கன் பிரியாணி விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |