காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TAMILNADU WATER SUPPLY AND DRAINAGE SYSTEM) நிர்வாக இயக்குனர் (MANAGING DIRECTOR) பி. ஏகாம்பரம் IAS - ஐ சென்னையில் மே 16 அன்று சந்தித்து - நகரில் தற்போது மேற்கொள்ளப்படும் பல நாட்களுக்கு ஒரு முறையிலான குடிநீர் விநியோகம் குறித்து விளக்கினார். நகரில் மேற்கொள்ளப்படும் விநியோக முறையை மேம்படுத்த தனது துறை மூலம் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அப்போது அவர் உறுதி அளித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி செயற்பொறியாளர் ஆர்.சங்கரன், ஆத்தூர் குடிநீரேற்று நிலைய துணைப் பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர், 31.05.2012 அன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சிக்கு வருகை தந்து - நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை சந்தித்தனர். அச்சந்திப்பில் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் - சில ஆலோசனைகளையும் வழங்கினர்.
தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பி. ஏகாம்பரம் IAS - நகரில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த - தனது வாரியத்தின் ஐந்து பரிந்துரைகளை - நகர்மன்றத் தலைவருக்கு வழங்கியுள்ளார். அவைகள் வருமாறு:
(1) சட்டப்பூர்வமற்ற முறையில் பெறப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளையும் நகராட்சி துண்டிக்க வேண்டும்
(2) பம்பிங் மெயின் குழாய் மூலம் - இல்லங்களுக்கும், பிறருக்கும் வழங்கப்படும் - குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்கவேண்டும்
(3) அநேக இல்லங்களில் - பம்ப்செட் மூலம் அதிக அளவில் குடிநீர் உரியப்படுகிறது. நகராட்சி இதனை அனுமதிக்கூடாது. அந்த பம்ப்செட் - களை இணைப்புகளில் இருந்து அகற்றவேண்டும்
(4) மேல ஆத்தூரில் தற்போது செயல்படும் பம்ப்செட் - காயல்பட்டினம் நகராட்சியால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் வழங்க திறன் கொண்டதாக இல்லை. ஆகவே - துவக்கமாக அமைக்கப்பட்ட 4 குடிநீர் தொட்டிகளின் அருகில் - குடிநீர் தேக்கங்கள் (SUMPS) அமைத்து - பொருத்தமான பம்ப்செட்கள் கொண்டு, முறையான இணைப்புகளை ஏற்படுத்தி, இதர 15 குடிநீர் தொட்டிகளுக்கும் குடிநீர் வழங்க நகராட்சி ஏற்பாடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது
(5) தற்போது நகராட்சி பகுதியில் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் தண்ணீரை அளவிட மீட்டர் பொருத்தப்படவில்லை. நகராட்சியின் நுழைவு பகுதியில் மீட்டர் பொறுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு காயல்பட்டினத்தில் நிலவும் குடிநீர் விநியோகப்பிரச்சனைக்கு தீர்வுகளாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பி. ஏகாம்பரம் IAS தெரிவித்துள்ளார்.
|