இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ தமிழ் நாளிதழும் - தமிழகத்திலிருந்து முஸ்லிம்களால் வெளியிடப்படும் ஒரே நாளிதழுமான “மணிச்சுடர்” துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நடத்தப்பட்ட வெள்ளி விழாவில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவருமான மு.கருணாநிதி சிறப்பு மலரை வெளியிட்டார். விபரம் பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ தமிழ் நாளிதழ் “மணிச்சுடர்” துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, கடந்த 04.10.2012 வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில் சென்னை பெரியார் திடல் கேளரங்கில் வெள்ளி விழா நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் - தமிழ்நாடு மாநில தலைவரும் - 'மணிச்சுடர்' நாளிதழின் ஆசிரியருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விழாவிற்குத் தலைமையேற்று தலைமையுரையாற்றினார்.
அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும் - “மணிச்சுடர்” நிர்வாக இயக்குனருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வரவேற்புரையாற்றினார். காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் - மணிச்சுடர் சேர்மனும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் விழா அறிமுகவுரையாற்றினார்.
இவ்விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட “மணிச்சுடர்” சிறப்பு மலரின் முதற்பிரதியை, தமிழக முன்னாள் முதல்வரும் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதி வெளியிட, வடக்கு கோட்டையார் ஹாஜி. வி.எம்.செய்யது அஹமது அதனைப் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில், திமுக பொருளாளரும் - தமிழக முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில், “மணிச்சுடர்” இயக்குநர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. “மணிச்சுடர்” செய்தி ஆசிரியராகப் பணியாற்றும் காயல் மகபூப், மலர் வெளியீட்டுக்கு உதவிய இப்றாஹீம் மக்கீ, விளம்பரதாரர்களான டி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் - ஹாஜி எஸ்.அக்பர்ஷா, கே.ஏ.எஸ்.ஜெய்னுலாபிதீன் அன் கோ - பூட்டு மார்க் லுங்கி நிறுவனத்தார், வாவு ஜுவல்லர்ஸ் சார்பாக ஹாஜி மஸ்னவீ, தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் எஸ்.கே.ஸாலிஹ், நாளிதழ் வினியோகிப்பாளர் - ஆறுமுகநேரியைச் சேர்ந்த வியாகப்பன் ஆகியோரும் அதில் உள்ளடக்கம்.
“மணிச்சுடர்” செய்தி ஆசிரியர் காயல் மகபூப் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. விழாவில், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், தோழமை கட்சியைச் சேர்ந்தவர்களும், தொழிலதிபர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
கோவை தங்கப்பா
www.mediavoicelive.com
[செய்தி திருத்தப்பட்டது @ 05:11 / 14.10.2012] |