சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஊடக மையம் அக்டோபர் 12 அன்று முதலைமச்சரால் திறக்கப்பட்டது. அது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திகுறிப்பு வருமாறு:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 12.10.2012 அன்று தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரிவினர் ஆகியோர் அரசு செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தங்கள் ஊடகங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்திடும் வகையில் 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஊடக மையத்தையும் (Media Centre) செய்தித்துறைக்கென்று www.tndipr.gov.in என்ற புதிய வலைதளத்தினையும் தொடங்கி வைத்தார்கள்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் செயல்பட்டுவரும் செய்தி வெளியீட்டு பிரிவின் மூலம் அரசின் செய்தி வெளியீடுகள், புகைப்படங்கள் ஆகியவை தற்போது நிகரி (Fax) மற்றும் மின்னஞ்சல் (e-mail) மூலம் அனைத்து நாளிதழ்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோல் வீடியோ படக்காட்சிகள் டேப்பில் பதிவு செய்யப்பட்டு தனிநபர் மூலமாக அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக, காலதாமதம் ஏற்படுவதுடன், இத்தகவல்கள் ஊடகங்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனை முற்றிலுமாகத் தவிர்த்து, அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அதிவேகத்தில் அனுப்பி வைத்திடவும், தகவல் சென்றடைவதை உறுதிப்படுத்திடவும், புதியதாக ஊடக மையம் தலைமைச் செயலகத்தில் அமைத்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டார்கள்.
இதன்படி, செய்தியாளர்கள் தங்களுக்கு அரசால் வழங்கப்படும் செய்திகள் மற்றும் புகைப்படங்களையும், தாங்களாகவே சேகரித்த செய்திகளையும் தங்களது ஊடகங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இணையதளத்துடன் கூடிய வசதியும், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடியோ படக்காட்சிகளை ஊடகங்கள் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளும் வசதியும் (Online Media Exchange and Supply Chain Management Solution) ஊடக மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊடக மையத்திலுள்ள வலைதளம் www.tndipr.gov.in மிக நவீன வசதிகள் கொண்ட சர்வர், குத்தகை அடிப்படையிலான இணைப்பு (Leased line) மற்றும் பாதுகாப்புடன் கூடிய மென்பொருள் (Secured Software) ஆகியவற்றைக் கொண்டு இயங்குவதால் செய்தியாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை உடனுக்குடன் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள இயலும். செய்திகள் அனுப்பிய தகவல் குறுஞ்செய்தியாக (SMS) தொடர்புடைய அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்படும்.
இந்த ஊடக மையம் மூலம் செய்தி வெளியீடுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை பெரிய அளவில் சேகரித்து வைத்து (Archives) தேவைப்படும் போது நொடிப்பொழுதில் தேடி எடுத்துக் கொள்ள முடியும். அரசு வெளியிடும் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மற்றவர்களால் மாறுதல் (Manipulate) செய்திட இயலாது.
இந்தியாவிலேயே முதன் முறையாக இத்தகைய அதிநவீன வசதிகளுடன் 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையத்தையும், தமிழக அரசின் நிகழ்வுகளை உலகின் எந்த பகுதியிலிருந்தும் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் செய்தித்துறைக்கென்று உருவாக்கப்பட்ட www.tndipr.gov.in என்ற புதிய வலைதளத்தினையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 12.10.2012 அன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்கள்.
இந்த வலைதளத்தில் அரசின் செய்தி வெளியீடுகள், அரசு விழா புகைப்படங்கள், தமிழரசு இதழ், தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் வீடியோ செய்தி
மலர், நினைவகம் குறித்த விவரங்கள், துறையில் பணியாற்றும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் முதலான பல்வேறு தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அனைத்து பொதுமக்களும் இந்த வலைதளத்தின் மூலம் அரசின் செய்திகள், அரசால் வெளியிடப்படும் புகைப்படங்கள், அரசு விழா வீடியோ படக் காட்சிகள் ஆகியவற்றை உடனுக்குடன் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும், திருப்பூர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு 40 லட்சத்து 43 ஆயிரத்து 199 ரூபாய் மதிப்பீட்டில் 7 புதிய ஜீப்புகளையும், தமிழக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி, விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு 34 லட்சத்து 84 ஆயிரத்து 906 ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய டெம்போ டிராவலர் வீடியோ வேன்களையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 12.10.2012 அன்று வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி,
அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9. |