இந்தியாவின் இரண்டு முக்கிய மழை காலங்கள் - தென் மேற்கு பருவமழைக்காலம் மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலம் ஆகும். ஜூன் மாதம்
முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென் மேற்கு பருவமழை - இவ்வாண்டு தமிழகத்தில் பொய்த்தது.
வானிலை ஆராய்ச்சி நிலையம் - மழை பொய்த்ததா, இல்லையா என முடிவு செய்ய அளவுகோல் ஒன்றினை கையாளுகிறது. அதன்படி - சராசரியை
விட + அல்லது - 19 சதவீதம் மழை பெய்தால் அதனை சாதாரண (Normal) முடிவாக எடுத்துக்கொள்கிறது. - 20 முதல் - 59 சதவீதம் வரை
குறைவாக பெய்த மழையை, குறைப்பாடு (Deficient) என்றும், - 60 முதல் - 99 சதவீதம் வரை குறைவாக பெய்த மழையை மிகவும்
குறைந்த மழை (Scanty) என்றும் - வானிலை நிலையம் முடிவுசெய்கிறது.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 20 இல் இயல்புக்கு குறைவான மழையே (Deficient) - இவ்வாண்டு - தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் - பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கிட்டத்தட்ட மழையே பெய்யவில்லை (Scanty) (0.4 மி.மி. மழையே பதிவாகி உள்ளது).
தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் பல இடங்களில் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் - வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பின்னணியில் - தமிழக மக்கள், வடகிழக்கு
பருவமழையை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
அக்டோபர் 20 இல் இருந்து ஏழு நாட்களுக்கு முன்னரோ, பின்னரோ வடகிழக்கு பருவ மழை பொதுவாக துவங்கும் என வல்லுனர்கள் கூறுவதுண்டு. கடந்த சில ஆண்டுகளாக இந்த பருவமழை துவங்கிய தேதியினை காண்போம்:
2001 - அக்டோபர் 16
2002 - அக்டோபர் 25
2003 - அக்டோபர் 19
2004 - அக்டோபர் 18
2005 - அக்டோபர் 12
2006 - அக்டோபர் 19
2007 - அக்டோபர் 22
2008 - அக்டோபர் 15
2009 - அக்டோபர் 29
2010 - அக்டோபர் 29
2011 - அக்டோபர் 24
வடக்கிழக்கு பருவ மழை காலம் - தென் இந்தியாவின் தென் பகுதி பெரும் மழையைப் பெறும் காலம். தமிழ்நாடு, புதுச்சேரி, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பகுதிகள் இந்த பருவமழை மூலம் பயனடைகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டு மழையில் 48 சதவீதம் இந்தக் கால கட்டத்தில் பெறப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் ஆண்டு மழையில் 60 சதவீதமும், உள் மாவட்டங்கள் ஆண்டு மழையில் 40 முதல் 50 சதவீதம் வரையும் பெறுகின்றன.
உள் கர்நாடகம், கேரளா மற்றும் லச்சதீவுகள் தென் மேற்குப் பருவமழைக் காலத்தில் பெரும் மழையைப் பெற்றாலும், அக்டோபர் முதல் டிசம்பர்
வரை ஆண்டு மழையில் 20 சதவீதம் மழையைப் பெறுகின்றன.
தென்மேற்குப் பருவ மழை முடியும் தருவாயில் உள் மாவட்டங்களே கடலோர மாவட்டங்களை காட்டிலும் அதிக மழையைப் பெறும். இது பொதுவாக
மாலை இரவு நேரங்களில் நிகழும். நாட்கள் செல்லச் செல்ல, கடலோர பகுதிகளில் மழை நிகழ்வு அதிகமாகி உள் மாவட்டங்களில் குறையும். தமிழக ஆந்திர கடற்கரைப் பகுதிகளில், அக்டோபர் மத்தியில் மழை அதிகமாவதையே வடகிழக்குப் பருவ மழைத் தொடக்க காலமாகக் கொள்ளப்படும்.
பொதுவாக இந்த மழை இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நிகழும். அதிக மழை என்பது பொதுவாக இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நிகழும். பொதுவாக பின் இரவு முதல் காலை வரை மழை என்பது வடக்கிழக்குப் பருவ மழையின் குணாதிசயம்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவை அருகாமையிலுள்ள காலங்களில் நாள் முழுவதும் தொடர் மழை நீடிக்கும்.
வடகிழக்குப் பருவமழை என்பது தொடர்மழையாக மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கும். நான்கு நாட்களுக்கு மேல் தொடரும் நிகழ்வுகள் என்பது 20 சதவீதத்திற்கும் குறைவாக நடக்கும் நிகழ்வுகள் ஆகும். வறண்ட வானிலையோ / குறைந்த அல்லது மழையோ இல்லாத நீண்ட தொடர் நாட்கள் என்பது சாதரணமாக இந்தக் காலக் கட்டங்களில் நடக்கும் நிகழ்வுதான்.
2004 ஆம் ஆண்டு முதல் இயல்புக்கு அதிகமாகவே வடக்கிழக்கு பருவ மழை தமிழகத்தில் பெய்துள்ளது. ஆண்டுவாரியாக - இயல்பை விட எத்தனை சதவீதம் - அதிகமாக மழை, கடந்த ஆண்டுகளில் பெய்தது என்பதை காண்போம்:
2004 - +1%
2005 - +79%
2006 - +15%
2007 - +21%
2008 - +31%
2009 - +13%
2010 - +42%
2011 - +23%
புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டுவரும் ஏறத்தாழ கடந்த 100 ஆண்டுகளில், இயல்புக்கு அதிகமாக பல ஆண்டுகள் தொடர்ச்சியாக (தொடர்ந்து 8 ஆண்டுகள்) மழை பெய்துள்ள காலகட்டத்தில் நாம் இருப்பதாக துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் - இவ்வாண்டும் இயல்பான மழையே இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மூலம்:
மண்டல வானிலை மையம், சென்னை |