நிராதரவான முதியோருக்கு உதவும் நோக்குடன், “முதியோர் சமூக நலத்திட்டம் - Old Age People Social Welfare Scheme” என்ற பெயரில் புதிய திட்டத்தை சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிகழ்முறை:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 12.10.2012 வெள்ளிக்கிழமையன்று 20.10 மணிக்கு, மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த - மன்றத்தின் மூத்த உறுப்பினர் வி.என்.எஸ்.முஹ்ஸின் தம்பி - கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட கீழக்கரையைச் சேர்ந்த ஹாஜி முஹம்மத் ஸதக், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அறிமுகவுரை:
பின்னர், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அறிமுகவுரையாற்றினார். மன்றக் கூட்டங்களில் காலந்தவறாமல் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திப் பேசிய அவர், கூட்டங்களில் தாம் பங்கேற்கும் தகவலை கூட்ட நாளன்று மன்றச் செயலாளருக்கு எஸ்.எம்.எஸ் - குறுஞ்செய்தி மூலம் அவசியம் தெரிவிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். அத்துடன், நடப்பு செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையிலும் அதிகளவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
“முதியோர் சமூக நலத்திட்டம்” அறிமுகம்:
அதனைத் தொடர்ந்து, “Old Age People Social Welfare Scheme” - “முதியோர் சமூக நலத்திட்டம்” என்ற பெயரில் புதிய திட்டம் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தாயகம் காயல்பட்டினத்தில், வயது முதிர்ந்த நிலையில் - உழைக்க இயலாமலும் - ஆதரவற்ற நிலையிலும் உள்ள முதியோரைக் கண்டறிந்து, அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதுகுறித்து அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் அதை செயல்படுத்துவது குறித்து ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திலீடுபட்டனர். இதுகுறித்து மன்றத்தின் அடுத்து வரும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவெடுக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
முன்மொழியப்பட்ட இத்திட்டம் குறித்த உறுப்பினர்களின் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்தை வரவேற்றுப் பேசிய மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தேவையுடையோருக்கு உதவ வேண்டும் என்ற மன்ற அங்கத்தினரின் ஆர்வத்தை வெகுவாகப் பாராட்டினார். அத்துடன், இத்திட்டத்திற்கும் - இதுபோன்ற அனைத்து திட்டங்களுக்கும் உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பு என்பது அவரவர் சுய விருப்பத்தின் அடிப்படையிலானது மட்டுமே என்றும், நிதி தந்துதான் ஆக வேண்டும் என எந்த நிர்பந்தமும் யாருக்கும் கிடையாது என்றும் தெளிவுற கூறினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
பின்னர், நடப்பு கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் சிற்றுரையாற்றினார். மன்றத்தின் அனைத்து செயற்பாடுகளையும் புகழ்ந்து பேசிய அவர், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டத்தை மனதார வரவேற்றுள்ள மன்ற அங்கத்தினர் அனைவரையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார். மன்ற உறுப்பினர்கள் அனைவரின் நல்ல பல ஆலோசனைகளைப் பெற்று, இம்மன்றம் நகர்நலன் கருதி இன்னும் பற்பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
செயலரின் - கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அதனைத் தொடர்ந்து, கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்து - அவை நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார்.
மன்றத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் அனைத்துறுப்பினர்களும் ஆர்வத்துடன் பணியாற்றுமாறு வலியுறுத்திய அவர், மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கு மெருகேற்றும் வகையில் புதிய உறுப்பினர்களும் நல்ல பல ஆலோசனைகளை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.
மன்றத்தின் நகர்நல திட்டங்களுள் ஒன்றான - பயன்படுத்தப்பட்ட நல்லாடை உதவித் திட்டத்தின் கீழ், மன்றத்தால் அனுப்பி வைக்கப்பட்ட நல்லுடைகளை, தாயகம் காயல்பட்டினத்தில் - மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் மற்றும் பொதுநல ஊழியர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரிணைந்து வினியோகித்த விபரங்கள் குறித்து மன்றச் செயலாளர் கூட்டத்தில் தெரிவித்ததுடன், இத்திட்டத்தை நன்முறையில் செயல்படுத்தியமைக்காக அவ்விருவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பொருளரின் வரவு-செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து, இதுநாள் வரையிலான மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை கூட்டத்தில் தாக்கல் செய்தார். நடப்பு பருவத்திற்கான நிதிநிலையறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு - மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துறுப்பினர்களின் நல்லாதரவுடன் நிதிநிலையறிக்கையையும் தாண்டி நகர்நலப் பணிகளாற்றிட வேண்டும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
மன்றத்தின் “தேவையுடையோருக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்ட”த்தின் கீழ், எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு இதுவரை பெறப்பட்டுள்ள பட்டியல் படி 55 பயனாளிகளுக்கு, இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 22ஆம் தேதி சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உண்டியல் திறப்பு:
மன்றத்தின் - “உண்டியல் நிதி சேகரிப்பு” திட்டத்தின் கீழ், உறுப்பினர்களின் அனைத்து உண்டியல்களும், வரும் டிசம்பர் மாதம் முறைப்படி திறக்கப்படும் என்றும், அதற்குள் மன்ற உறுப்பினர்கள் தங்களாலியன்றளவுக்கு உண்டியலை நிரப்பி வைக்குமாறும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பழைப்பாளர்களுக்கு மன்றம் குறித்து விளக்கம்:
இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டோர் கூட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தனர். அவர்களுக்கு மன்றத்தின் நகர்நலப் பணிகள் மற்றும் செயல் திட்டங்களை செயற்குழு உறுப்பினர்கள் விளக்கினர்.
சிறப்பழைப்பாளர்கள் உரை:
அதனைத் தொடர்ந்து, உரையாற்றிய சிறப்பழைப்பாளர் கீழக்கரையைச் சேர்ந்த ஹாஜி முஹம்மத் ஸதக், மன்றத்தின் இவ்வுயரிய பணிகளுக்கு நிரந்தர வருமானத்தை ஈட்டிடும் பொருட்டு பயனுள்ள சொத்து ஒன்றை வாங்க முயற்சிக்கலாம் என்றும், அதற்காக சிறப்பு நிதியை உருவாக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
நகர்நலப் பணிகளில் மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, கூட்டங்களில் திரளாக பங்கேற்பு, வயதில் சிறிய உறுப்பினர்கள் கூட ஆரோக்கியமாக கருத்துப் பரிமாற்றம் செய்யும் விதம் ஆகியன குறித்து அவர் வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
நிறைவில், தன் மகனது திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்க வருமாறு அனைவருக்கும் அழைப்பிதழுடன் அழைப்பு விடுத்தார்.
அடுத்து பேசிய சிறப்பழைப்பாளர் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் விரைவாக உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்ததுடன், இதற்காக சென்னை மக்கா மஸ்ஜிதில் நடத்தப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில், பயிற்சியில் கலந்துகொள்வோருக்கு அதன் ஏற்பாட்டாளர்களால் உணவு - தங்குமிடம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல தகவல்களையும் தெரிவித்து, இதுகுறித்து சமுதாயத்திலுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
புதிய இலச்சினை:
மன்றத்திற்கான இலச்சினையை தயாரிக்கும் பொறுப்பு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் வசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரால் தயாரிக்கப்பட்டு இறுதி முடிவு செய்யப்படும் இலச்சினையை விரைவாக - சிங்கப்பூர் சங்கங்கள் பதிவாளருக்கு (Registrar of Societies - ROS) அரசு அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பயனாளிகள் விபரங்களைப் பதிவு செய்ய மென்பொருள்:
மன்றத்தால் நிதியுதவியளிக்கப்படும் பயனாளிகள் குறித்த விபரங்களைப் பதிவு செய்து பாதுகாப்பதற்காக சிறப்பு மென்பொருள் ஒன்றை தயாரித்தளிக்குமாறு மன்ற செயற்குழுவால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை, மன்ற செயற்குழுவின் நடப்பு துணைக்குழு உறுப்பினர் எம்.எல்.எஸ்.மொகுதூம் அப்துல் காதிர் ஏற்றுக்கொண்டு, விரைவில் செய்து தருவதாகத் தெரிவித்தார்.
ஹஜ் பயணம் செய்யவுள்ள உறுப்பினருக்கு வாழ்த்து:
நடப்பாண்டில் தன் குடும்பத்துடன் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மன்ற உறுப்பினர் எம்.ஏ.கே.ஷேக்னா லெப்பைக்கு கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களனைவரின் ஹஜ் கிரியைகள் அனைத்தும் இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமைந்திட கூட்டத்தில் பிரார்த்திக்கப்பட்டது.
உறுப்பினரின் திருமண அழைப்பு:
அடுத்து, வரும் டிசம்பர் மாதம் 26ஆம் தேதியன்று மணவிழா காணவுள்ள மன்ற உறுப்பினர் ஜக்கரிய்யா - தனது திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு அனைத்துறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
புது மணவாழ்வு காணவுள்ள அவர் சிறந்த திருமண வாழ்வைப் பெற்றிட வாழ்த்திப் பிரார்த்திப்பதாகக் கூறி, கூட்டத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அடுத்த செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உறுப்பினர் செய்யித் லெப்பை நியமிக்கப்பட்டார்.
கூட்டம் நிறைவு:
விவாதிக்க வேறம்சங்களெதுவுமில்லா நிலையில், ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ துஆ - பிரார்த்தனையைத் தொடர்ந்து, 21.30 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் துணைக்குழுவினர் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இடியாப்ப பிரியாணி இரவுணவாக விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |