குற்றாலத்தில் 5 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காவை இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (15.10.2012) தலைமைச் செயலகத்தில், திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் 5 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காவை காணொலிக் காட்சி (VIDEO CONFERENCING) மூலமாக திறந்து வைத்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணை 37 ஏக்கர் பரப்பளவில் 1959-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஐந்தருவிக்கு மிக அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பண்ணையானது அருவிப்பூங்கா, பழத்தோட்டம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் நிலவடிவமைப்பைப் பாதுகாப்பது
குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதே இப்பூங்காவின் நோக்கமாகும்.
இச்சுற்றுச்சூழல் பூங்காவானது இயற்கை வனத்துடன் ஒன்றிணைந்து, மேற்கு தொடர்ச்சி மலையின் அழகினை மேலும் மெருகூட்டும் வண்ணம் சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கமும், நீர் வீழ்ச்சியும், கற்சிலைகளும், சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்ட சிலைகளும், அழகிய ஓடுகள் பதிக்கப்பட்ட நீண்ட நடைபாதைகளும், உணவுக் கூடமும், சிறுவர்களும், பெரியவர்களும்
நீர்வீழ்ச்சியினை ரசித்துக் கொண்டே நடந்து செல்லும் வகையில் நடைபாதை ஆகியவற்றை கண்டு மகிழும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதே இப்பூங்காவின் சிறப்பு அம்சமாகும்.
மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி பார்வையிட ஏதுவாக இப்பூங்காவில் பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரணித் தோட்டம், மூங்கில் தோட்டம், ரோஜாத் தோட்டம், வண்ணத்துப் பூச்சித் தோட்டம், தாமரை மற்றும் அல்லிப்பூக்கள் தோட்டம், மூலிகைத் தோட்டம், வாசனைப் பூக்கள் தோட்டம், கற்தோட்டம், இயற்கை அருவித் தோட்டம் போன்ற பல்வகையான தோட்டங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், கருத்து
மிக்கதாகவும் சிறந்த நில வடிவமைப்புடன் இச்சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவின் இதர முக்கிய அம்சமாக சாகச விளையாட்டுத் தோட்டமும், நடைபாதைதோறும் சங்க கால நிகழ்வுகளை நினைவு கூறும் காட்சிகளுடன் கூடிய சிமெண்ட் பதாகைகளும், பார்வைக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளதோடு வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சுற்றுச்சூழல் பூங்காவிற்கு அழகூட்டும் வண்ணம், பூங்கா முழுவதும் வண்ண விளக்குகளும் தானியங்கி
முறையில் செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளையும் பொதுமக்களையும் கவரும் வண்ணம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினரால் 5 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காவை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வேளாண்மைத் துறைச் செயலாளர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9. |