டெங்கு காய்ச்சல் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
டெங்கு காய்ச்சல் தொடர்பாக பத்திரிகைகளில் பல்வேறு செய்திகள் வெளி வந்துள்ள நிலையில், இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (15.10.2012) எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித் துறை முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்த ஆண்டு மே மாதம் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமாக விளங்கும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவும் நான் ஆணையிட்டு இருந்தேன்.
எனது உத்தரவின் பேரில், பொது இடங்களில் கொசுக்களை குறைத்து அதன் மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தம் வகையில், புகை மருந்து மூலம் கொசுக்களை அழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல், பருவ மாற்றம் காரணமாக பூச்சிகள் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பது, வீடுகளில் மழைநீர் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்வது, குடிநீரைக் காய்ச்சி பருகுதல், நீர் பாத்திரங்களில் கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைத்தல், காய்ச்சலுக்கான அறிகுறி ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் 800 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் பொது சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிகளை சேர்ந்த உயரதிகாரிகள் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மேற்பார்வையிட்டு வருகிறார்கள். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே 2 கோடியே 49 லட்சம் ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காடு மக்களுக்கு அன்றாடம் காய்ச்சல் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்று தான். இந்த அளவு மழைக் காலங்களில் 2 விழுக்காடாக அதிகரிக்கக் கூடும். இவ்வாறு வரும் காய்ச்சல் அனைத்தையும் டெங்கு காய்ச்சல் என்று கருத முடியாது. இருப்பினும், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமை நாள்தோறும் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்குத் தேவையான அனைத்து மாத்திரை மருந்துகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவில் ரத்தம் தயார் நிலையில் உள்ளது. எந்தப் பகுதியிலும் மூன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்தப் பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணம் கண்டறியவும், உடன் அதனை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வளவு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், விரைவு ரத்த சோதனை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவினை அடிப்படையாகக் கொண்டு, டெங்கு
காய்ச்சல் அதிகரித்து வருவதாக மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தும் வண்ணம் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. பல்வேறு உறுப்புகள் செயல்படாததால் இறந்த ஒருவரைகூட டெங்கு காய்ச்சலால் இறந்துவிட்டார் என பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது அடிப்படை ஆதாரமற்றது. டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த எடுக்கப்படும் பரிசோதனை எலிசா ரத்த பரிசோதனை தான். இதன் அடிப்படையில், இந்நாளில் 59 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உள்ளது. இவர்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் குணமடைந்து வருகிறார்கள். இந்த மாதம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேர் பூரண குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர்.
எனவே, டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்பதையும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து
நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா,
தமிழ்நாடு முதலமைச்சர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9. |