தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து காயல்பட்டினம் நகருக்கு குடிநீரேற்றப்படும் பிரதான குழாயில், ஆத்தூர் - ஆறுமுகநேரிக்கு இடையேயுள்ள வரண்டியவேல் என்ற ஊர்ப்பகுதியில், 14.10.2012 ஞாயிற்றுக்கிழமையன்று உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஆத்தூரிலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீரேற்று நிலையத்திலிருந்து வழமை போல அன்றைய தினம் நள்ளிரவு 03.00 மணிக்கு காயல்பட்டினத்திற்குத் திறந்து விடப்பட்டது. காலை 07.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சியின் குடிநீர் வினியோக அதிகாரி மற்றும் அலுவலர்கள் நகரிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டியைப் பார்த்தபோது, அதில் தண்ணீர் ஏறாமலிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக, தண்ணீர் குழாய் செல்லும் பாதைகளில் அவர்கள் சோதனை நடத்தியபோது, வரண்டியவேல் பகுதியில் பெரும் உடைப்பு ஏற்பட்டு, அருகிலுள்ள வயலில் பெருமளவில் தண்ணீர் வெளியாகிக்கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
அதனையடுத்து, காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் தலைமையில் - உடைப்பு ஏற்பட்ட இடத்தைத் தோண்டும் பணி 14.10.2012 ஞாயிற்றுக்கிழமையன்று துவங்கியது. சுமார் 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாயில் உடைப்பேற்பட்ட பகுதியை வெட்டியெடுத்து, மாற்றுக்குழாயைப் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்றது.
மூன்று நாட்கள் போராட்டத்திற்குப் பின் இன்று காலை 08.00 மணியளவில் உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.
சீரமைப்புப் பணிகளை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மாவட்ட உதவி செயற்பொறியாளர் சங்கரன், ஆத்தூர் குடிநீரேற்று நிலைய துணைப் பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பார்வையிட்டனர்.
தற்போது சோதனை அடிப்படையில் அக்குழாய் வழியே குடிநீர் அனுப்பப்பட்டு, உடைப்பு சரியான முறையில் அடைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கள உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய் |