தமிழகத்தில் 10 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும் உள்ளன. இந்த நகர்புற உள்ளாட்சிமன்றங்கள் - தாங்கள் விதிக்கும் வரிகள், அரசு வழங்கும் மானியங்கள் மூலமும் - தங்கள் நிதியினை பெறுகின்றன. மேலும் - அடிப்படை சேவைகளான, குடிநீர் விநியோகம், சாலைகள் அமைத்தல், குப்பைகளை பராமரித்தல் போன்ற பணிகளை - உள்ளாட்சி மன்றங்களே, தங்கள் நீதி மூலம் செய்கின்றன.
இந்தியாவில் தற்போது - மூன்றடுக்கு (மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி மன்றங்கள்) ஆட்சி முறை (THREE-TIER SYSTEM) கடைபிடிக்கப்படுகிறது. ஜனத்தொகையில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவின் வளர்ச்சிக்கு, அடிமட்டத்தில் உள்ள நிர்வாகமான உள்ளாட்சி மன்றங்களே மிக முக்கியம் என்ற சித்தாந்தம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக - மத்திய அரசும், மாநில அரசும் - உள்ளாட்சி மன்றங்களுக்கு பெருவாரியான நிதியினை ஒதுக்குகின்றன.
உதாரணமாக - காயல்பட்டினம் நகராட்சி ஒவ்வொரு ஆண்டும் தான் விதிக்கும் வரிகள் மற்றும் வழங்கும் சேவைகள் மூலம் சுமார் 1.5 கோடி ரூபாய் நிதி திரட்டுகிறது. இது தவிர மாநில அரசு - மானியமாக சுமார் 2.5 கோடி ரூபாய் (கழித்தல்கள் போக) வழங்குகிறது. மேலும் - மத்திய அரசு மானியம், ஸ்டாம்ப் டுட்டி போன்ற வகைகள் மூலம் 50 லட்சத்துக்கும் மேல் - வருமானம், ஆண்டொன்றுக்கு, காயல்பட்டினம் நகராட்சி பெறுகிறது. இவைகள் போக - தமிழக அரசு, Integrated Urban Development Mission (IUDM) திட்டம் மூலம், ஆண்டொன்றுக்கு - குறிப்பிட்ட பணிகளுக்கு என சுமார் 2 கோடி ரூபாய் அளவு நிதி வழங்குகிறது. ஆக - காயல்பட்டினம் நகராட்சிக்கு என ஆண்டொன்றுக்கு குறைந்தது 6.5 கோடி ரூபாய் நிதி ஆதாரம் உள்ளது.
இதில் நகராட்சி - தனது செலவு வகைக்காக 2 கோடி ரூபாய் அளவில் - பயன்படுத்துகிறது. இதில் ஊழியர் சம்பளம், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் போன்ற செலவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
எனவே - ஆண்டொன்றுக்கு, நகராட்சி வளர்ச்சிப்பணிக்கு என சுமார் 4.5 கோடி ரூபாய் காயல்பட்டினம் நகராட்சி வசம் உள்ளது. ஐந்தாண்டில் - காயல்பட்டினம் நகராட்சி, வளர்ச்சி பணிக்கு என குறைந்தது சுமார் 22.5 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வாய்ப்புள்ளது.
இரண்டாம் நிலை நகராட்சியில் இவ்வளவு பணம் புரள்கிறது என்றால் - தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிமன்றங்களில் புரளும் பணம் - பல ஆயிரம் கோடி அளவில் இருக்கும் என்பது தெளிவு.
இந்த பணம், அது தொடர்பான வரவு செலவு கணக்குகள் - முறையாக கையாலப்படுவதற்கு என தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அதிகாரப்பூர்வ கணக்கு வைப்பு கையேடு (ACCOUNTING MANUAL) வெளியிட்டுள்ளது. 273 பக்கங்கள் கொண்ட இந்த கையேடு, உள்ளாட்சி மன்றங்களின் நிதி நிர்வாகம் குறித்து அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும்.
|