தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று - தமிழக முதல்வர் ஜெயலலிதா - மடிக்கணினி வழங்கினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (17.10.2012) தலைமைச் செயலகத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 2011-2012ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கான பொது விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ஒரு மடிக்கணினி வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தார்கள்.
அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் வரையறுக்கப்படாத நிதி ஒதுக்கீட்டிலிருந்து தங்களின் தேவைக்கேற்ப ஒரு புதிய மடிக்கணினி அல்லது கணினி, பிரிண்டர் மற்றும் இணையதள இணைப்பு வசதி ஆகியவற்றை வாங்கிட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி மடிக்கணினிகள் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டது. இந்தப் புதிய மடிக்கணினிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடமிருந்து மடிக்கணினி பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் கோரிக்கையினை ஏற்று மடிக்கணினி வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்குத் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர், மாண்புமிகு நிதியமைச்சர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், அரசு தலைமை கொறடா, தலைமைச் செயலாளர், சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9.
|