காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு மேலாத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சுத்திகரிப்பு மற்றும் குடிநீரேற்று நிலையத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அணைகளில் நீர் குறைவாக இருந்ததாலும், நீர் வரத்து பாதிக்கப்பட்டதாலும் - காயல்பட்டினம் நகராட்சிக்கு வழமையாக வழங்கப்பட்ட 23 லட்சம் லிட்டர் தண்ணீருக்கு பதிலாக, குறைந்தளவு தண்ணீரே கொடுக்கப்பட்டு வருகிறது. தினமும் 11 லட்ச லிட்டர் என குறைக்கப்பட்ட தண்ணீரின் அளவு, படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 15 லட்ச லிட்டர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் அக்டோபர் 14 அன்று ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து காயல்பட்டினம் நகருக்கு குடிநீரேற்றப்படும் பிரதான குழாயில், ஆத்தூர் - ஆறுமுகநேரிக்கு இடையேயுள்ள வரண்டியவேல் என்ற ஊர்ப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நீர் கசிவு ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் போராட்டத்திற்குப் பின் இன்று (அக்டோபர் 16) காலை 08.00 மணியளவில் உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காயல்பட்டணம்.காம் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் துணை பொறியாளர் பாலசுப்ரமணியமிடம் வினவியது. இன்று காலை - உடைப்பு சரிசெய்யப்பட்டவுடன், மீண்டும் தண்ணீர் பம்ப் செய்ய துவக்கப்பட்டதாகவும், தொடர்ந்து - நாளை மாலை 4 மணி வரை (32 மணி நேரம்) - காயல்பட்டினத்திற்கு தண்ணீர் பம்ப் செய்யப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இன்று முதல் தினசரி 20 லட்சம் லிட்டர் தண்ணீர் காயல்பட்டினத்திற்கு வழங்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சி - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கவேண்டிய பாக்கி தொகை 40 லட்ச ரூபாயில், 30 லட்ச ரூபாய் தரப்பட்டுவிட்டதாகவும், மீதியுள்ள 10 லட்ச ரூபாயில் பெரும்பங்கு, மின்சார கட்டணம் என்றும், அதனை நகராட்சி நேரடியாக மின்சார வாரியத்திடம் செலுத்திய பிறகு, மீதி பாக்கி தொகையை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். |