தமிழகத்தில் தற்போது கடும் அளவில் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் ஒரு மணி நேரத்திற்கும், மாவட்டங்களில் பல மணி நேரங்களும் - மின்சார விநியோகம் தினசரி துண்டிக்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள உற்பத்தியாளர்கள் முதல் சாதாரண மக்கள் வரை இதனால் பெருத்த அதிருப்தியில் உள்ளனர். இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் - இது குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா - நிலைமையை கண்காணிக்க குழு ஒன்றினை அமைத்துள்ளார். அது குறித்து - தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையில் தமிழகத்தின் மின் நிலைமை குறித்து இன்று (17.10.2012) தலைமைச் செயலகத்தில் விரிவான
ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நிதி அமைச்சர், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர், உள் துறை முதன்மைச் செயலாளர், நிதித் துறை முதன்மைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாடு குறித்தும், இதைப் போக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும், பணிகள் நடைபெற்று வரும் மின் திட்டங்களை செயல்பாட்டிற்கு
கொண்டு வருவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டினை
விரைவில் போக்கும் வகையில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு, கீழ்க்காணும் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குழுவினை அமைக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டார்கள்.
1. மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
2. அரசு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு
3. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
4. தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம்
5. அரசு முதன்மைச் செயலாளர், எரிசக்தித் துறை
6. அரசு முதன்மைச் செயலாளர், உள் துறை
7. அரசு முதன்மைச் செயலாளர், நிதித் துறை
8. முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்-2
9. அரசுச் செயலாளர், வேளாண்மைத் துறை
மேற்படி குழு, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கூடி தமிழகத்தின் மின் நிலைமையை ராய்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரிடம் தனது அறிக்கையினை அளிக்கும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9 |