தமிழக முதலமைச்சர் ஹஜ் பெருநாளை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
இஸ்லாமியப் பெருமக்கள் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத்
திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உள்ளம் கனிந்த பக்ரீத்
நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும்
நன்நாளாகவும், ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்று கூடி இறைவனின்
புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும்
திருநாளாகவும் கொண்டாடப்படுவதே பக்ரீத் திருநாளாகும். இறைவனின் விருப்பத்திற்கு
ஏற்ப தன் ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிம்
அவர்களின் தன்னலமற்ற தியாகத்தினை உலகுக்கு உணர்த்தும் உன்னத நாள்
இத்திருநாள் ஆகும்.
நபிகள் நாயகம் போதித்த அன்பு, அமைதி, மனிதநேயம் தழைத்தோங்க,
அனைவரும் அன்னாரின் உன்னதமான வழியினைப் பின்பற்றி பாசமிக்க சகோதர,
சகோதரிகளாய் மன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ இந்தத் தியாகத்
திருநாளாம் பக்ரீத் திருநாளில் உறுதியேற்போம்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய
திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும்
மலரட்டும்; அது மனித குல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என
வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா,
தமிழ்நாடு முதலமைச்சர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி - மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9. |