சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து சிங்கை காயல் நல மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 03.11.2012 சனிக்கிழமையன்று 17.15 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்முறை:
ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கூட்டத்திற்குத் தலைமை வகித்த மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
வரவேற்புரை:
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ, சிறப்பழைப்பாளர் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் ஆகியோரைக் குறிப்பிட்டு வரவேற்ற அவர், துபை காயல் நல மன்றத் தலைவர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ அவர்களின் நகர்நல செயல்பாடுகள், உதவும் மனப்பான்மை குறித்து புகழ்ந்துரைத்தார்.
சிங்கை காயல் நல மன்றம் இன்று நகர்நலனுக்கான பல நல்ல திட்டங்களுடன் இறையருளால் வெற்றிப்பாதையில் பயணித்து வருவதற்கு - ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ தலைமையிலான துபை காயல் நல மன்றம் ஒரு தூண்டுகோலாகும் என்று அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், குறைந்த கால அவகாசத்திற்கிடையில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், தமது பணிச்சுமைகளுக்கிடையில் ஆர்வத்துடன் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரையும் உளமார பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர் - சிறப்பழைப்பாளருக்கு கண்ணியம்:
பின்னர், சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பழைப்பாளரின் பொதுநலச் சேவைகளைப் பாராட்டி மன்றத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ அவர்களுக்கு மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். சிறப்பழைப்பாளர் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் அவர்களுக்கு மன்ற செயற்குழு உறுப்பினர் வி.என்.எஸ்.முஹ்ஸின் தம்பி சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
பின்னர், நடப்பு கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத் சிற்றுரையாற்றினார். மன்றத்தால் நடத்தப்படும் வழமையான கூட்டங்கள் மற்றும் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளால், சிங்கப்பூரிலுள்ள காயலர் சமூகத்திற்கிடையே போற்றத்தக்க அளவில் நல்ல உறவு மலர்ந்து மேம்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
பின்னர், மன்றத்தின் புதிய உறுப்பினர் அபுல் காஸிம் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். குறுகிய காலத்தில் அவருக்குத் தகுதியான வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றமைக்காக கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அண்மையில் சிங்கப்பூரில் தமக்கேற்ற வேலைவாய்ப்புகளைப் பெற்றிட்ட மன்ற உறுப்பினர்கள் ஷாஹுல் ஹமீத் - அபுல் காஸிம் ஆகியோர், தாம் வேலைவாய்ப்பைத் தேடியபோது மன்றத்தால் அளிக்கப்பட்ட உதவிகளையும், மன்ற உறுப்பினர்கள் தமக்காக செய்த உழைப்பையும் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தனர்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் சமர்ப்பித்து, அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்பட்ட விவரங்களை கூட்டத்தில் விளக்கிப் பேசினார்.
கடந்த ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினத்திலுள்ள நிராதரவான - உழைக்கவியலாத - ஏழை-எளிய 60 குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி பெருநாள் சிறப்பு உதவியாக வழங்கப்பட்டமை குறித்து விவரித்தார்.
மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு - பரிசீலனையில் உள்ள “முதியோர் சமூக நலத்திட்டம்” குறித்து இதுவரை பெறப்பட்ட கருத்துக்களை அவர் கூட்டத்தில் தெரிவித்ததுடன், இதுகுறித்து வரும் 2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள - மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மன்றத்திற்கு புதிய இலச்சினை:
பின்னர், மன்றத்திற்காக தான் உருவாக்கி வரும் இலச்சினை (லோகோ) குறித்து உறுப்பினர் செய்யித் இஸ்மாஈல் சிறு விளக்கமளித்தார். இதுகுறித்து மன்றத்தின் அடுத்த செயற்குழுவில் இறுதி முடிவு செய்து, ஒப்புதலுக்காக சிங்கப்பூர் அரசின் சங்கப் பதிவாளருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வரவு-செலவு கணக்கறிக்கை:
பின்னர், மன்றத்தின் நாளது தேதி வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை கூட்டத்தில் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
தொடர்ந்து பேசிய பொருளாளர், பல்வேறு தேவைகளுக்கு நிதியுதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனுக்களில், ஏற்கப்பட்ட முதற்கட்ட விண்ணப்பங்களுக்கு ரூ.1,10,000 (ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய்) நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அத்தொகை வினியோகிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ள நிதிநிலை முன்னறிக்கைப்படி அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நகர்நலத் திட்டங்கள் இறையருளால் நிறைவேற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூர் பிரதிநிதியின் தொலைபேசி உரை:
பின்னர், மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், காயல்பட்டினத்திலிருந்து தொலைபேசி வாயிலாக கூட்டத்தில் உரையாற்றினார். மன்றத்தால் அண்மையில் செய்து முடிக்கப்பட்ட “அத்தியாவசிய சமையல் பொருட்களுதவித் திட்டம்” மற்றும் “பயன்படுத்தப்பட்ட நல்லாடைகள் உதவித் திட்டம்” ஆகியன குறித்து கூட்டத்தில் விளக்கமளித்த அவர், மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு - பரிசீலனையிலுள்ள “முதியோர் சமூக நலத் திட்டம்” குறித்து நகர பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களையும் உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
தேவையுடையோருக்கு மன்றத்தால் வழங்கப்படும் உதவிகள் குறித்த தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அவ்வாறே பாதுகாக்கப்படும் என்று தெரிவித்த அவர், மன்றத்தால் நகரில் செய்யப்படும் உதவித் திட்டங்களின்போது, விடுமுறையில் தாயகத்திலிருக்கும் மன்ற உறுப்பினர்கள் ஆர்வத்துடன் முன்வந்து ஒத்துழைத்ததாகவும், அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
துணைக்குழு உறுப்பினர்கள் உரை:
பின்னர், மன்ற செயற்குழுவின் துணைக்குழு உறுப்பினர்கள் - மன்றப் பணிகள் குறித்து தமது கருத்துக்களை கூட்டத்தில் பதிவு செய்தனர். சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தேடி வரும் இளைஞர்களுக்கு மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் உதவிகள் - ஒத்துழைப்புகள் கிடைப்பதற்கரிய பொன்னான வாய்ப்பு என்றும், தங்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்காக உறுப்பினர்கள் - ஏதோ தமது தேவைக்கு உழைப்பது போல ஒத்துழைத்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்ததாகவும் தெரிவித்த துணைக்குழு உறுப்பினர் ஹபீப் மரைக்கார், மன்றத்தின் இலட்சியமான - 100 காயலர்களை சிங்கையில் குடியமர்த்தும் திட்டம் இறையருளால் விரைவில கைகூடும் என்று தெரிவித்தார்.
மன்ற செயல்பாடுகள் குறித்து சிறப்பு விருந்தினர்களுக்கு விளக்கம்:
பின்னர், மன்றத்தின் நகர்நல செயல்பாடுகள் குறித்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பழைப்பாளருக்கு மன்றச் செயலாளரும், பொருளாளரும் தகவல்களைத் தெரிவித்ததுடன், எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தனர்.
சிறப்பழைப்பாளர் உரை:
பின்னர் உரையாற்றிய சிறப்பழைப்பாளர் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், சிங்கப்பூர் சுற்றுவட்டாரத்திலுள்ள காயலர் சமூகத்தை - சிங்கை காயல் நல மன்றத்தில் அங்கமாக அழைப்பு விடுக்கலாம் என்றும்,
காயல்பட்டினத்தில் Professional Courses படிக்கும் மாணவ-மாணவியரின் விபரப்பட்டியலை சேகரித்து, அவர்களுள் தேவையுடையோரை இனங்கண்டு உதவ வேண்டும் என்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தேடி வரும் இளைஞர்களுக்கு மன்றத்தின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள் மிகவும் பாராட்டத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர் உரை:
பின்னர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ சிறப்புரையாற்றினார்.
சிங்கை காயல் நல மன்றம் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், மன்றத்தின் நகர்நலப் பணிகளை தான் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும், அவையனைத்துமே தனக்கு திருப்தியளிப்பதாகவும் தெரிவித்த அவர், மன்றத்தின் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் விதம், கூட்டங்கள் மற்றும் பணிகளில் உறுப்பினர்களின் மனப்பூர்வமான பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு, புதுப்புது திட்டங்களை - அவசரப்படாமல் - பக்குவமாக - தேவையான கால அவகாசத்துடன் அறிமுகப்படுத்தி, நீண்டகாலம் நீடிக்கத்தக்க வகையில் அவை செயல்படுத்தும் பாங்கு என அனைத்துமே தன்னை பெரிதும் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கு இங்கு பெரும்பான்மையாக உள்ள இளைய உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளே முதுகெலும்பாக இருக்கும் என்றும், அவர்கள்தான் வண்ணமயமான நலத்திட்டங்களை தம் சிந்தையிலிருந்து வெளிப்படுத்தி செயல்படுத்திட இயலும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மன்றத்தின் “அத்தியாவசிய சமையல் பொருட்களுதவித் திட்டம்” மற்றும் உதவிகள் கோரும் விண்ணப்பதாரர்களை - செயற்குழு மற்றும் துணைக்குழுவினர் தொலைபேசி வழியே விசாரிக்கும் நடைமுறை உள்ளிட்டவை குறித்து அவர் வியந்து பேசினார்.
இம்மன்றம் சிங்கப்பூரின் அரசுப்பதிவு பெற்ற அமைப்பு என்பதால், நகர்நலப் பணிகளை நிறைவேற்றுவதில் பல்வேறு சுதந்திரங்கள் இதற்கு நிறைவாகவே கிடைக்கும் என்று தெரிவித்த அவர், வயதில் இளைய - படிப்பறிவு மிக்க - புரிந்துணர்வு கொண்ட பட்டாதாரிகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இம்மன்றம், எடுத்த காரியங்களை இறையருளால் நிச்சயம் வெற்றிகரமாக செய்திட இயலும் என்று தெரிவித்தார்.
பின்னர் அவர், தன் தலைமையிலான துபை காயல் நல மன்றத்தின் செயல்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசி, தனதுரையை நிறைவு செய்தார்.
அடுத்த செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவு:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராக உறுப்பினர் செய்யித் லெப்பை தெரிவு செய்யப்பட்டார்.
காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி:
மன்றத்தால் அவ்வப்போது நடத்தப்படும் “காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி”யை, சிங்கப்பூர் Marina Bay Sands பகுதியிலுள்ள Gardens By the Bay என்ற இடத்தில் நடத்துவதென்றும், நிகழ்முறை விபரங்கள், தேதி ஆகியன விரைவில் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், 19.00 மணியளவில், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் நன்றியுரை மற்றும் துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு - துணைக்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு:
பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் Mee Goreng, Murtabak, Roti Prata ஆகிய உணவுப் பதார்த்தங்களும், இந்திய மற்றும் மலாய் உணவு வகைகளும் பஃபே முறையில் பரிமாறப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |