காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் காஜா முகைதீன் பணி நிறைவுபெற்றுள்ளார். அதனையொட்டி, அப்பள்ளி வளாகத்தில் அவருக்கு பிரியாவிடையளிக்கும் நிகழ்ச்சி, 31.10.2012 புதன்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், ஹாஜி வாவு உவைஸ், ஹாஜி நெய்னா ஸாஹிப், மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளியின் தலைவர் ஹாஜி முஹ்யித்தீன் தம்பி என்ற துரை, அதன் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி ஜாஃபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பள்ளியின் புதிய தலைமையாசிரியராகப் பொறுப்பேற்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சென்ட்ரல் பள்ளிகளின் தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், சென்ட்ரல் துவக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் பாபு, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.செண்பகவள்ளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமையாசிரியர் எச்.காஜா முஹ்யித்தீன் பணி நிறைவுபெறுவதையொட்டி அவரை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர் எச்.காஜா முகைதீனுக்கு - பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் தங்க நாணயம் வழங்கினார்.
பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியையர், அலுவலர்கள் சார்பாக ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்க நாணயம் வழங்கினார்.
பின்னர், மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளியின் சார்பில் அதன் தலைவர், செயலாளர் மற்றும் ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் ஆகியோரிணைந்து, பணி நிறைவுபெறும் தலைமையாசிரியருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர் எச்.காஜா முகைதீன் ஏற்புரை வழங்கினார்.
பள்ளியின் ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் இருந்து தன்னால் இயன்றளவுக்கு நல்ல முறையில் பணியாற்றியதாகவும், தனது பணிக்காலத்தில் நல்ல பல ஆலோசனைகளுடன் நிர்வாகத்தை வழிநடத்திய பள்ளி நிர்வாகிகள், முழு மனதுடன் ஒத்துழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மனதார நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் பொருளியல் முதுநிலை ஆசிரியர் எம்.கே.ஷரீஃப் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், நகரப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
பணி நிறைவுபெறும் தலைமையாசிரியர் எச்.காஜா முஹ்யித்தீன், 1979ஆம் ஆண்டு தமிழாசிரியராக சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் தனது பணியைத் துவக்கினார். 1991ஆம் ஆண்டு வரலாறு பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணி உயர்வு பெற்றார். 1999ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகள் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி, தற்போது பணி நிறைவுபெற்றுள்ளார்.
தனது பணி நிறைவை நினைவுகூரும் வகையில், தலைமையாசிரியர் எச்.காஜா முகைதீன் - பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்ட காட்சி:-
தகவல்:
B.செய்யித் அப்துல் காதிர்
படங்கள்:
Z.A.ஷேக் அப்துல் காதிர்
மற்றும்
D.நியாஸ்
ஆசிரியர்கள்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி
காயல்பட்டினம்.
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது @ 20:24 / 10.11.2012] |