காயல்பட்டினத்தில் தற்போது பெய்து வரும் மழை உள்ளிட்ட காரணங்களால் அப்பாபள்ளித் தெரு, பெரிய நெசவுத் தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது.
வாகனத்திலும், நடந்தும் செல்வோருக்கு இது பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தி வருவதாக நகராட்சியில் முறையிடப்பட்டதன் பேரில், சில தினங்களுக்கு முன் அங்குள்ள பள்ளங்கள் நிரப்பப்பட்டன.
இந்நிலையில், நேற்றும் - இன்றும் நள்ளிரவில் பெய்த மழை காரணமாக, அப்பா பள்ளித் தெருவிலும், பெரிய நெசவுத் தெருவிலும் பள்ளங்கள் நிரப்பப்பட்ட பகுதிகளில் மழை நீரை உள்வாங்கி, சொதசொதப்பாக உள்ளது.
அப்பகுதிகளின் வழியே நடந்து செல்வோர் பலர் - பள்ளத்தில் கால் சிக்கி பரிதவித்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நகரில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பெரிய நெசவுத் தெருவில் பேருந்து போக்குவரத்து உள்ளதால், பேருந்துகளின் பாரம் தாங்காமல் - பள்ளங்களில் நிரப்பப்பட்ட மண் வெளியேறியது. இன்று காலை முதல் மாலை வரை 3 பேருந்துகள் சேற்றுக்குள் சிக்கித் திணறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் வினவியபோது, அப்பகுதிகளில் ஏற்பட்ட பள்ளங்கள் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நீரை உறிஞ்சும் ஒரு வகை சரல் கொண்டு அவற்றை நிரப்புவதாகவே நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்ததாகவும், சிறு மழைக்குக் கூட தாங்காத அளவுக்கு மட்டமான மணல் போடப்பட்டுள்ளது தனக்கு வியப்பளிப்பதாகவும் தெரிவித்ததுடன், அப்பகுதிகளின் நடப்பு சீர்கேட்டை உடனடியாக சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பள்ளங்களில் நிரப்பப்பட்டுள்ள பொருளின் தன்மை - தரம் குறித்து வினவுவதற்காக காயல்படடினம் நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் செல்வமணியைத் தொடர்புகொள்ள முயன்றபோது இணைப்பு கிடைக்கவில்லை. நகராட்சியின் உதவி திட்ட அலுவலர் செந்தில்குமாரைத் தொடர்புகொள்ள முயன்றபோது மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படவில்லை.
தகவல்:
சித்தீக்
பெரிய நெசவுத் தெரு
காயல்பட்டினம் |