புதிய செயல்திட்டங்களுடன் மீண்டும் செயல்பட ‘மெகா’ அமைப்பு தீர்மானித்துள்ளதுடன், நகர்மன்றத் தலைவரை சந்தித்து நகர்நலன் குறித்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து, ‘மெகா’ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நகர்மன்றத் தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு வழிகாட்டுவதற்காகத் துவங்கப்பட்ட ‘மெகா‘வை, “நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION“ என்ற பெயரை மாற்றி,, நகர்மன்றம், நகரின் கலாச்சாரம், ஒழுக்க விழுமியங்கள் உள்ளிட்ட நகர்நல அம்சங்களை உள்ளடக்கி, ‘மெகா‘ என்ற பெயரையும் உட்பொதிந்து, முறைப்படி அரசுப்பதிவு செய்து, புதிய செயல்திட்டங்களுடன் அமைப்பை தொடர்ந்து நடத்துவதென 01.12.2011 அன்று காயல்பட்டினம் புதுக்கடைத் தெரு - ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் இல்லத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், நகர பொதுமக்களின் அனைத்து உரிமைகளையும் நிலைநாட்டல், அதற்கான வழிகாட்டல்களை வழங்கல் ஆகிய செயல்திட்டங்களை உள்ளடக்கி, MASS EMPOWERMENT and GUIDANCE ASSOCIATION - MEGA (மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா) என்ற பெயரில் செயல்படுவதெனவும், கலப்பற்ற சிந்தனையுடன் இச்செயல்திட்டத்தில் இணைந்து செயல்பட ஆர்வமுள்ளோரைக் கண்டறிந்து, அவர்களையும் இணைத்துக்கொள்ளவும், விரைவில் அமைப்பை அரசுப்பதிவு செய்திடவும் - இம்மாதம் 01ஆம் தேதி வியாழக்கிழமையன்று மாலையில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துவக்கமாக, மெகா சர்வதேச ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் தலைமையில், ஹாஜி எஸ்.ஏ.நூஹ் (ஹாங்காங்), எஸ்.அப்துல் வாஹித், எம்.ஏ.புகாரீ (48), ஏ.எஸ்.புகாரீ, ‘முத்துச்சுடர்’ எஸ்.எம்.எஸ்.நூஹுத்தம்பி உள்ளிட்டோரடங்கிய குழுவினர் 03.11.2012 அன்று காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கை அவரது இல்லத்தில் சந்தித்து, நகர்நலன் குறித்த கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை அளித்தனர். நகர்மன்றத் தலைவரின் கணவர் ஷேக் இச்சந்திப்பின்போது உடனிருந்தார்.
இவ்வாறு ‘மெகா’ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |