நகர்மன்றத் தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு வழிகாட்டுவதற்காகத் துவங்கப்பட்ட ‘மெகா‘வை, “நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION“ என்ற பெயரை மாற்றி,, நகர்மன்றம், நகரின் கலாச்சாரம், ஒழுக்க விழுமியங்கள் உள்ளிட்ட நகர்நல அம்சங்களை உள்ளடக்கி, ‘மெகா‘ என்ற பெயரையும் உட்பொதிந்து, முறைப்படி அரசுப்பதிவு செய்து, புதிய செயல்திட்டங்களுடன் அமைப்பை தொடர்ந்து நடத்துவதென 01.12.2011 அன்று காயல்பட்டினம் புதுக்கடைத் தெரு - ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் இல்லத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், நகர பொதுமக்களின் அனைத்து உரிமைகளையும் நிலைநாட்டல், அதற்கான வழிகாட்டல்களை வழங்கல் ஆகிய செயல்திட்டங்களை உள்ளடக்கி, MASS EMPOWERMENT and GUIDANCE ASSOCIATION - MEGA (மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா) என்ற பெயரில் செயல்படுவதெனவும், கலப்பற்ற சிந்தனையுடன் இச்செயல்திட்டத்தில் இணைந்து செயல்பட ஆர்வமுள்ளோரைக் கண்டறிந்து, அவர்களையும் இணைத்துக்கொள்ளவும், விரைவில் அமைப்பை அரசுப்பதிவு செய்திடவும் - இம்மாதம் 01ஆம் தேதி வியாழக்கிழமையன்று மாலையில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, இம்மாதம் 03ஆம் தேதியன்று, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கை சந்தித்த ‘மெகா’வினர், நகர்நலன் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அவரிடம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சியால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறித்த தகவல் சேகரிப்புப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 09.11.2012 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் நகரின் நான்கு ஜும்ஆ பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டது.
அதுபோல இன்று, காயல்பட்டினத்தில் வாங்கப்படும் அனைத்து நாளிதழ்களுடனும் இப்படிவம் இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. |