நகர சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்திடுவதற்கு, அதிகளவில் மரங்களை வளர்த்து பசுமையைப் பெருக்கிட KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
“புற்றுநோய் காரணி கண்டறியும் குழு - CANCER FACT FINDING COMMITTEE - CFFC” சார்பில், 03.03.2012 அன்று, காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செயல்படுத்திடும் பொருட்டு புதிதாகத் துவக்கப்பட்ட அமைப்பு KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA.
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக் கண்டறிந்து - பல்வேறு செயல்திட்டங்களுடன் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை அவ்வப்போது அளித்ல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றை KEPA செய்து வருகிறது.
நகர சுற்றுச்சூழல் பல காரணிகளால் மாசுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அதிகளவில் மரங்களை நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவதை பெருமளவில் தடுக்கவியலும் என்ற எண்ணத்தில், 08.11.2012 வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் நெய்னார் தெருவிலுள்ள நஜீபா பேலஸ் இல்லத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். மற்றொரு துணைத்தலைவர் ஹாஜி ஜெஸ்மின் கலீல் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
தனது தேர்தல் அறிக்கையின்படி காயல்பட்டினம் நகராட்சியின் மூலம் ‘பசுமை காயல்’ திட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைக் கொண்டு துவக்கி வைக்கப்பட்டதாகவும், பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தால் இத்திட்டத்தை முழு அளவில் செயல்படுத்திட இயலும், அதற்கு இக்கருத்தரங்கம் பயன் தர வேண்டும் என்றும் அவர் ஆவல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம் முழுக்க லட்சக்கணக்கான மரங்களை நட்டு பசுமைப் புரட்சி செய்து வரும் - தூத்துக்குடி மாநகராட்சியின் 51ஆவது வார்டு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை நெறிப்படுத்திய KEPA அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான ஒரு பணிக்காக நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்திற்குச் சென்றபோது, சிறப்பு விருந்தினர் சாமுவேல் ஞானதுரை விபத்து போல ஒரு சந்திப்பு நகர்மன்றத் தலைவருக்குக் கிட்டியதாகவும், லட்சக்கணக்கான மரங்களை நட்டு பசுமைப் புரட்சி ஏற்படுத்தி வருபவர் அவர் என்பது அப்போதுதான் தெரிய வந்ததாகவும் அறிந்துகொண்ட நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினத்திற்கு வருகை தந்து, நகரின் பசுமை ஆர்வலர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததன் அடிப்படையிலேயே தற்போது சிறப்பு விருந்தினரைக் கொண்டு கருத்தரங்கம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர், சிறப்பு விருந்தினர் சாமுவேல் ஞானதுரை உரையாற்றினார். துவக்கமாக தன்னை அறிமுகப்படுத்திப் பேசிய அவர், காயல்பட்டினத்தில் கால்பந்து விளையாட பல ஆண்டுகளுக்கு முன் தான் சார்ந்த அணியை அழைத்து வந்துள்ளதாகத் தெரிவித்தார். அக்காலத்தில் காயல்பட்டினம் - தூத்துக்குடி கால்பந்து அணிகள் ஒருவருக்கொருவர் அசைக்க முடியாத சவாலாக இருந்தனர் என்றும், இக்காலத்தில் அனைவரும் ரசாயணம் கலந்த உணவை உண்பதால் அந்த வலு முழுமையாக இல்லாமலாகிவிட்டதாகவும், அதனால் தற்போது கால்பந்து விளையாடும் வீரர்கள் எளிதில் எலும்பு முறிவுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்தார்.
நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தற்போது 2100 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவதாகவும், 2015ஆம் ஆண்டில் மாவட்டத்தின் மின் உற்பத்தி 45,000 மெகாவாட் என்றிருக்கும் என்றும், அதற்குத் தேவையான நிலக்கரி மூலப்பொருட்களை - நிமிடத்திற்கு 60 ட்ரக் வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டி வரும் என்றும் தெரிவித்த அவர், அவ்வளவு சரக்குகளைக் கையாள இன்னொரு துறைமுகம (ஹார்பர்) தேவைப்படும் என்றும் ஆனால் அது நடைமுறை சாத்தியமற்றது என்றும் தெரிவித்தார். இந்த நிலக்கரி ஏற்படுத்தும் மாசு காரணமாக தற்போது ஒரு நாளைக்கு ஒரு சட்டை மாற்றியே அணிந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள நாம், விரைவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு சட்டையை மாற்றிக்கொள்ள வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற மாசு ஏற்படுத்தும் பொருட்கள் - கேரளாவில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள சாலைகள் வழியே வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டால் அங்குள்ள மக்கள் உடனடியாகத் தடுத்து விடுவர் என்றும், இங்குள்ள மக்கள் அதற்கான விழிப்புணர்வைப் பெறவில்லை என்றும் தெரிவித்த அவர், அதிகளவில் மரங்களை வளர்த்தேனும் ஓரளவுக்கு மாசுவைக் கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
ஆட்சியாளர்களை விட அரசியல்வாதிகளும், பொதுமக்களும்தான் இது விஷயத்தில் முனைப்புடன் செயல்பட இயலும். எனவே, நகரைப் பசுமையாக்குவது அவர்களின் கடமை. ஒரு நபர் தன் பங்கிற்கு 5 மரங்களை வளர்ப்பதாக உறுதியெடுத்துக்கொண்டாலே நகரை முழுமையாக பசுமைப் போர்வை போர்த்தி அலங்கித்து விடலாம்.
நான் பல ஊர்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறேன்... பொது இடங்களில் நட்டி பராமரிப்பதற்கு மட்டுமே அரசு மரங்களை இலவசமாகத் தருகிறது. ஆனால் அதில் பல சிரமங்கள் உள்ளன. ஒரு மரத்தை நட்டுவிட்டு, அதைப் பாதுகாக்க செலவழித்து ஒரு வேலி வைக்க வேண்டும். பின்னர் மரத்தையும் - வேலியையும் ஒன்றாகப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. இதற்கு மாய்ச்சல் பட்டே பலர் இவ்விஷயத்தில் அலட்சியம் காண்பிக்கின்றனர். எதைச் செய்தாலும், அதில் எனக்கு என்ன பலன் உள்ளது? என்பதே மக்களின் பொதுவான மனநிலையாக இருக்கும்.
இந்த உண்மையை உணர்ந்துகொண்ட நான் என் முயற்சியில் தனியாருக்கு மரங்களைக் கொடுத்தேன். அவர்கள் அவற்றை முறைப்படி வளர்த்து பராமரித்து, தம் வீட்டைச் சுற்றிய நிலங்களை பசுமைப்படுத்தினர். இந்தப் புரட்சியின் எல்லை விரிவடையவே, அரசிடமிருந்து நான் பெறும் மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இன்று, எந்த வகையான எத்தனை மரங்களை நான் கேட்டாலும், அது தனியாருக்கு என்றாலும், பொது இடங்களுக்கு என்றாலும் - தருவதற்கு அரசு ஆயத்தமாக உள்ளது.
எனவே, நீங்கள் சாலைகளில் மரம் வளர்த்துப் பராமரிப்பதை இரண்டாவது முயற்சியாக வைத்துக்கொண்டு, உங்களுக்குப் பலன் தரும் புங்கை, மா, பலா, பெரிய நெல்லி, தேக்கு, சவுக்கு உள்ளிட்ட எந்த வகையான மரங்களையாவது வாங்கி வளர்த்துப் பராமரிக்க முடிவு செய்தால் உங்கள் முயற்சிக்கு உறுதுணைாயாக - எந்தக் கட்டணமுமின்றி மரங்களைப் பெற்றுத் தர நான் ஆயத்தமாக உள்ளேன்... அம்மரங்களை எடுத்துச் செல்வதை மட்டும் உங்கள் பொறுப்பில் நீங்கள் செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
நீங்கள் பெறும் மரங்களை எங்கு நட்டுகிறீர்களோ அதை ஒரு படம் எடுத்து எனக்குத் தர வேண்டும். 6 மாதங்கள் கழித்த பின், நீங்கள் பெற்ற மொத்த மரங்களில் 50 சதவிகத மரங்களையாவது நீங்கள் வளரச் செய்திருந்தால், உங்களுக்கு அடுத்தடுத்த முறைகளிலும் மரங்கள் வழங்கப்படும்.
உங்கள் நகர்மன்றத் தலைவர் சேர்மன் மேடம் அவர்களுக்கு மக்கள் நலனிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் தனியாத ஆர்வம் உள்ளதை அவர்களுடன் முதன்முறையாக சந்தித்து உரையாடியபோதே நான் உணர்ந்துகொண்டேன். எனவே, உங்கள் ஊரைப் பசுமையாக, அவர்களின் ‘பசுமைக் காயல்’ திட்டத்திற்கு உதவுவதற்கு என்னை எப்போது அழைத்தாலும் வந்து என்னாலான உதவிகளைச் செய்திட ஆவலாக உள்ளேன். ஆனால், அவையனைத்தும் வெற்றியடைய நீங்கள் ஒத்துழைப்பதுதான் ஒரே வழி.
அதை அவசியம் செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுத்து, எனது வருகைக்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, பசுமை ஆர்வலர்களை ஒன்றுகூட்டிய ஏற்பாட்டாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி.
இவ்வாறு, பசுமை ஆர்வலர் - சிறப்பு விருந்தினர் சாமுவேல் ஞானதுரை உரையாற்றினார்.
நன்றியுரைக்குப் பின், துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இக்கருத்தரங்கில், நகரின் பசுமை ஆர்வலர்களான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத், முஹம்மத் முஹ்யித்தீன், எம்.ஏ.புகாரீ (48), எஸ்.அப்துல் வாஹித், நோனா அபூ ஹுரைரா, ஹாஃபிழ் எம்.என்.புகாரீ, சாளை பஷீர் ஆரிஃப், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஹாங்காங் எஸ்.ஏ.நூஹ், கே.எம்.டி.சுலைமான், ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் உள்ளிட்டோரும், ஆறுமுகநேரி பேரூராட்சி உறுப்பினர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, KEPA அமைப்பின் சார்பில் - எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், எம்.என்.முஹம்மத் யூனுஸ், எம்.டபிள்யு.அதாவுல்லாஹ் ஆகியோர் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 21:38 / 14.11.2012] |