காயல்பட்டினம் நகராட்சி மூலமாக தினமும் பகுதிவாரியாக - வீடு வீடாக லாரிகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
13.11.2012 அன்று காயல்பட்டினம் தீவுத்தெருவிலும், 15.11.2012 அன்று (நேற்று) காலையில் குத்துக்கல் தெருவிலும் பெரிய கிளைகளைக் கொண்ட - வீடுகளிலிருந்து வெட்டப்பட்ட மரங்கள் சாலையோரங்களில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது.
வழமை போல குப்பை சேகரிப்பதற்காக நகராட்சி துப்புரவுப் பணிக்குழு லாரியில் வந்தபோது, அந்த மரக்கிளைகளையும் எடுத்துச் செல்லுமாறு அவற்றைச் செய்தவர்கள் கூற, அவர்கள் மறுத்ததையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த துப்புரவுப் பணியாளர்கள், பண்டிகை கால அரசு விடுமுறையைக் கூட பொருட்படுத்தாமல் - ஊர் நாறாமல் இருக்க வேண்டுமே என்று கருதி வாகனங்களில் வந்து வீடு வீடாக குப்பைகளைப் பெற்றுச் செல்வதாகவும், இதுபோன்று மரக்கிளைகளையும், பெயர்த்தெடுக்கப்பட்ட குடிசைகளையும், உடைக்கப்பட்ட கட்டிடக் குப்பைகளையும் திடீரென மொத்தமாகக் கொட்டினால், அதை எடுத்துச் செல்லவே பலமுறை வாகனத்தில் வரவேண்டியிருக்கும் என்பதோடு, வழமையாக சேகரிக்கப்படும் - ஆயிரக்கணக்கான வீடுகளின் குப்பைகளைச் சேகரிக்க இயலாமற்போய்விடும் என்பதாலேயே அவற்றை எடுத்துச் செல்ல தாம் மறுத்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும், தற்போது நகராட்சியில் இருக்கும் வாகனத்தைக் கொண்டு ஊர் முழுக்க ஒரே நாளில் அனைத்து வீடுகளிலும் குப்பையை சேகரிக்க இயலாது என்பதால், இடைவெளி விட்டு சேகரிக்கப்படுவதாகவும், ஆனால் அதுவரை கூட பொறுத்திருக்க விரும்பாத சில பொதுமக்கள் - சாலையோரங்களிலும், பள்ளிவாசல்கள் - பள்ளிக்கூடங்களின் கோட்டைச் சுவர்கள் அருகிலும் குப்பைகளைக் கொட்டிவிட்டுச் செல்வதாகவும், தம் வீடுகளின் முன் குப்பைகள் கொட்டப்பட்டால் எதிர்ப்பது போல இவ்வாறு பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சாலையோரத்தில் வெட்டப்பட்ட மரக்கிளை குப்பைகளை மொத்தமாகக் கொட்டியவரிடம் இதுகுறித்து வினவுகையில், அதற்கான கட்டணத்தைத் தந்துவிடுவதாகவும், நகராட்சி மூலம் இக்குப்பை அகற்றப்படாவிட்டால் - நடு வீதியில் அவற்றை வைக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் இதுகுறித்து வினவுகையில், வீடுகளில் அன்றாடம் சேரும் வழமையான சிறு குப்பைகளை சேகரிப்பதற்காகவே அதிகாலையில் லாரிகள் வருவதாகவும், மரங்களை வெட்டல், கட்டிடங்களை இடித்தல், கூரைகளைப் பெயர்த்தல் போன்ற பணிகளைச் செய்வோர், நகராட்சியில் அதற்கான சிறப்புக் கட்டணத்தைச் செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டு, அதற்காகவே பிரத்தியேகமாக வாகனம் வரும்போது கொட்டுவதே முறையாகும் என்றும் தெரிவித்தார்.
நகரில் தூய்மை கெடும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் ஆதங்கத்தைப் போலவே தான் உள்ளிட்ட நகர்மன்ற அங்கத்தினருக்கும் ஏற்படுவதாகவும், பொதுமக்களும் விதிப்படி காரியங்களை செய்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இடமேயிருக்காது என்றும் தெரிவித்த நகர்மன்றத் தலைவர், ஆட்சியாளர்களையும் - அதிகாரிகளையும் தட்டிக்கேட்பதற்கு தமக்குள்ள உரிமையை சரியாகப் பயன்படுத்தும் இம்மக்கள், சுயமாக தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளையும் உணர்ந்து செயல்படுவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்தார். |