மலபார் காயல் நல மன்றத்தின் புதிய செயற்குழுவிற்கான தேர்தல் வரும் மார்ச் 03ஆம் தேதியன்று நடைபெறுமென அதன் பொதுக்குழு தீர்மானித்துள்ளது. பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (SEENA) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
இறையருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 09ஆவது பொதுக்குழு கூட்டம் 11.11.2012 அன்று மாலை 5.30 மணிக்கு மன்றத்தின் செயலாளர் ஜனாப் ஹைதுரூஸ் ஆதில் அவர்கள் இல்லத்து மொட்டை மாடியில் கூடியது. மன்றத்தின் தலைவர் மஸ்ஊத் தலைமை தாங்கினார். செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் முன்னிலை வகித்தார்.
தேனீர் - சிற்றுண்டி வரவேற்பு:
துவக்கமாக கூட்டத்திற்கு வந்திருந்த அணைத்து உறுப்பினர்களுக்கும் இஞ்சி தேனீரும், சன்ஃபீஸ்ட் பிஸ்கட்டும் பரிமாறப்பட்டது.
மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் தாவூத் அவர்களின் மகன் முஹம்மது உசாமா இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியேடு வாசித்தல்:
செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் கடந்த கூட்டத்தின் நிகழ்ச்சியேட்டை வாசிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
இரண்டு அம்சங்களை வலியுறுத்தி வரவேற்புரை:
பின்னர், துணை தலைவர் முஹம்மத் ரஃபீக் KRS வரவேற்புரையாற்றினார்.
உறுப்பினர்கள் மன்றத்தின் அனைத்து கூட்டங்களிலும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்றல், வரும் மார்ச் 03ஆம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்படவுள்ள - மன்றத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்களை இப்போதே இனங்காணல், ஆகிய அம்சங்களை அவர் தனதுரையில் வலியுறுத்திப் பேசினார்.
சிறப்புரை:
பின்னர், கூட்டத் தலைவரும் - மன்றத் தலைவருமான ஜனாப் மஸ்ஊத் சிறப்புரையாற்றினார்.
அவர் தனதுரையில் இந்த பொதுக்குழு நடப்பு நிர்வாகத்தால் கூட்டபபடும் கடைசி பொதுக்குழுவாக இருக்கும் என்று நினைப்பதாக கூறினார். மேலும் குறைந்த காலஅளவில் நம் அமைப்பு மிக சிறந்த முறையில் செயல்பட்டுள்ளதாக கூறிய அவர்,இம்மன்றத்தின் செயல்பாடுகள் மிகவும் என்னை ஈர்த்து விட்டது... இதன் நிர்வாகிகள் மிகச் சிறப்பான முறையில் முன்கொண்டு செல்கிறார்கள்... எல்லாம்வல்ல அல்லாஹ் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் அவனளவில் பொருந்திக் கொள்வானாக” என்று கூறி பிரார்த்தித்தார். மேலும் வரும் காலங்களில் நம் அமைப்பிர்க்காகவும் நம் நகர் நலனுக்காகவும் சிறந்த முறையில் பணியாற்ற உறுப்பினர்கள் முன் வரவேண்டியதின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். இன்னும் இதுபோன்ற கூட்டங்கள் - ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்பதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசிய அவர், வாரம் முழுவதும் தமது பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைக்கவும் - போக்கவும் இதுபோன்ற ஒன்றுகூடல்கள் உதவியாக இருக்குமென அவர் தனதுரையில் தெரிவித்தார்.
மஃரிப் தொழுகை:
பின்னர் மக்ரிப் ஜமாஅத்திற்காக முதல் அமர்வு இடைநிறுத்தம் செய்யபட்டு, கூட்டாக தொழுகை நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலக்கல் குட்டீஸ்களின் நிகழ்ச்சியோடு இரண்டாம் அமர்வு துவங்கியது. வழமை போல் குட்டீஸ்களின் கலக்கல் வெகுவிமர்சையாக இருந்தது.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
ஊர் நடப்புகள் பொதுவான விஷயங்கள் மற்றும் பல நல்ல கருத்துக்கள், ஆலோசனைகளை உறுப்பினர்கள் தங்களுக்குள் பரிமாறிகொண்டனர்.
உணவேற்பாடு:
அதே நேரத்தில் கமகமக்கும் காயல் நெய்சோறு, களறிக்கரி, தால்ச்சா வகைகள் ஏர்பாடு செய்து நிகழ்விடத்துக்கு கொண்டுவந்தனர் அதன் பொறுப்பாளர்கலான ஆப்தீன் பாய், உஸ்மான் லிம்ர, உமர் அப்துல் காதர்,
செயலர் அறிக்கை:
அதனைத் தொடர்ந்து, கடந்த பொதுக்குழு முதல் நடப்பு பொதுக்குழு வரை மன்றத்தால் செய்து முடிக்கப்பட்டுள்ள நகர்நலப் பணிகளின் சுருக்க அறிக்கையை, மன்றச்செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் விளக்கிப் பேசினார்.
மேலும் பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதற்கான பொறுப்பாளர்கள் பரிசீலித்து வழங்கிய அறிக்கையை கூட்டத்தில் பகிர்ந்துகொண்ட அவர், இப்பணியில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றிய பரிசீலனைக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகத் தெரிவித்தார். மேலும் நம் அமைப்பில் 120 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளதாக கூறிய அவர், எதிர்வரும் மார்ச் 03ஆம் தேதியன்று ஜனநாயக முறைப்படி 120து பொதுக்குழு உறுப்பினர்களும் வாக்களித்து மன்றத்தின் புதிய 15 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கூறினார். எனவே நம் அமைப்பில் செயற்குழு உறுப்பினர்களாக பணியாற்ற விரும்பும் உறுப்பினர்கள் தயவு செய்து தானாக முன் வந்து விருப்பம் தெரிவிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார்,
பொருளாளரின் வரவு-செலவு கணக்கறிக்கை:
பின்னர், மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் உதுமான் அப்துர்ராஸிக் சமர்ப்பிக்க, மன்றத்தின் கணக்குத் தணிக்கையாளர் நூருல் அமீன் அவர்களால் கணக்குத் தணிக்கை செய்யப்பட்ட பின்னர், கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
மேலும் நம் அமைப்பு துவங்கி சுமார் 2 ஆண்டு 9 மாதங்களே ஆகியுள்ள நிலையில் கூடுதலாக நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்த அவர், அதற்காக வல்ல அல்லாஹ்வுக்கு முதற்கண் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் மன்றத்தின் வழமையான நிதியாதார செயல்திட்டங்களுடன், இனி வருங்காலங்களில் இன்னும் அதிகமான ஒத்துழைப்புகளை உறுப்பினர்கள் நல்கி, நகர்நலப் பணிகளை இன்னும் வீரியத்துடன் செய்திட துணைபுரியுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
கேள்வி நேரம்:
மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கென 25 நிமிடங்கள் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அந்நேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்றத் தலைவரும், அவரைத் தொடர்ந்து செயலாளரும் நிதானமாக பதில் அளித்தனர்.
வாழ்த்துரை:
பின்னர், மன்றத்தின் துணை செயலாளர் ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதர் உரையாற்றினார். அவர் தனதுரையில் மன்றத்தால் நடத்தப்படும் வழமையான கூட்டங்கள் மற்றும் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளால், மலபார் காயலர் சமூகத்திற்கிடையே போற்றத்தக்க அளவில் நல்ல உறவு மலர்ந்து மேம்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மஞ்சேரி சாமு அவர்கள் உரையாற்றினார். அவர் தனதுரையில், மலபார் காயல் நல மன்றம் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், மன்றத்தின் நகர்நலப் பணிகளை தான் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும், அவையனைத்துமே தனக்கு திருப்தியளிப்பதாகவும் தெரிவித்த அவர், மன்றத்தின் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் விதம், கூட்டங்கள் மற்றும் பணிகளில் உறுப்பினர்களின் மனப்பூர்வமான பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு, புதுப்புது திட்டங்களை - அவசரப்படாமல் - பக்குவமாக - தேவையான கால அவகாசத்துடன் அறிமுகப்படுத்தி, நீண்டகாலம் நீடிக்கத்தக்க வகையில் அவை செயல்படுத்தும் பாங்கு என அனைத்துமே தன்னை பெரிதும் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தீர்மானம்:
எதிர்வரும் 03.03.2013 அன்று மலபார் காயல் நல மன்றத்தின் புதிய செயற்குழுவிற்கான ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
அனைவருக்கும் நன்றி:
நிறைவாக கூட்டத் தலைவரும் - மன்றத் தலைவருமான ஜனாப் மஸ்ஊத் நன்றியுரையாற்றினார். நிகழ்வுகளில் பங்கேற்றோர், ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைருக்கும் அவர் தனதுரையில் நன்றி தெரிவித்தார். பின் - கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மாலை 5.30 மணிக்குத் துவங்கிய கூட்டம் இரவு 8.45 மணிக்கு நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இரவுணவு விருந்துபசரிப்பு:
கமகமக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய நெய்சோறு, களறிக்கறி மற்றும் தால்ச்சா என சுவையான உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
படக்காட்சிகளைத் தொகுப்பாகக் காண இங்கு சொடுக்குக!
இவ்வாறு மலபார் காயல் நல மன்றம் சார்பில் செய்தித் தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (Seena) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |