நகர சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்திடுவதற்கு, அதிகளவில் மரங்களை வளர்த்து பசுமையைப் பெருக்கிட KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
“புற்றுநோய் காரணி கண்டறியும் குழு - CANCER FACT FINDING COMMITTEE - CFFC” சார்பில், 03.03.2012 அன்று, காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செயல்படுத்திடும் பொருட்டு புதிதாகத் துவக்கப்பட்ட அமைப்பு KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA.
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக் கண்டறிந்து - பல்வேறு செயல்திட்டங்களுடன் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை அவ்வப்போது அளித்ல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றை KEPA செய்து வருகிறது.
நகர சுற்றுச்சூழல் பல காரணிகளால் மாசுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அதிகளவில் மரங்களை நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவதை பெருமளவில் தடுக்கவியலும் என்ற எண்ணத்தில், 08.11.2012 வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் நெய்னார் தெருவிலுள்ள நஜீபா பேலஸ் இல்லத்தில், பெருமளவில் மரங்களை நட்டு பசுமைப் புரட்சி செய்து வரும் - தூத்துக்குடி மாநகராட்சி உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை என்பவரைக் கொண்டு பசுமை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 17.11.2012 சனிக்கிழமை மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
KEPA துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் முன்னிலை வகித்தார்.
KEPA அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பசுமை காயல்’ திட்டம் தொய்வடைந்துள்ள நிலையில், அதற்குத் துணையாக - பசுமை ஆர்வலரான தூத்துக்குடி மாநகராட்சி உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை உதவியுடன் நகரில் அதிகளவில் மரங்களை நட்டுப் பராமரிக்க KEPA அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
KEPA அமைப்பின் சார்பில் துவக்கமாக, 1000 மரக்கன்றுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 500 மரக்கன்றுகள் கே.எம்.டி. மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நட்டுவதற்கு அளிக்கப்படவுள்ளதாகவும், எஞ்சிய மரங்களை மகுதூம் ஜும்ஆ பள்ளி, இளைஞர் ஐக்கிய முன்னணி, குருவித்துறைப்பள்ளி மற்றும் தனியார் இல்லங்களுக்கும் வினியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், வினியோகிக்கப்படும் மரங்களைப் பெறுபவரது பெயர், முகவரி, மரம் நடும் இடம், பராமரிப்பு விபரம் ஆகியவற்றை அதன் படத்துடன் இணைத்து பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும் என்று நியதி வகுக்கப்பட்டுள்ளதாகவும், அந்நியதியின்படி, விரும்பும் யாவருக்கும் - பசுமை ஆர்வலர் சாமுவேல் ஞானதுரை உதவியுடன் - அவர்களுக்குத் தேவையான மரங்கள் எத்தனை வேண்டுமானாலும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பதிவுகளை முறைப்படி பராமரித்து, ஒருங்கிணைந்த நிலையில் பணிகளைச் செய்திடும் பொருட்டு KEPA அமைப்பின் மூலம் மரங்களைப் பெற்றுக்கொள்ள அனைவரும் ஆயத்தமாகுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் பசுமை ஆர்வலர் சாமுவேல் ஞானதுரை உரையாற்றினார். பெருகி வரும் சுற்றுச்சூழல் மாசு தன்னைப் பெரிதும் கவலையுறச் செய்ததன் விளைவே மரம் வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டவும், அது வகைக்கு தேவையான உதவிகளைச் செய்திடவும் தன்னைத் தூண்டியதாகத் தெரிவித்த அவர், பொது இடங்களுக்குத்தான் என்றில்லாமல், தனியார் இல்லங்களிலுள்ள தோட்டங்களுக்குக் கேட்டால் கூட எத்தனை மரங்களை வேண்டுமானாலும் இலவசமாக வழங்கிட தான் ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்தார்.
காயல்பட்டினம் விரைவில் பசும்போர்வை போர்த்தப்பட்ட நகராகத் திகழ வேண்டுமெனவும், அதற்கு இந்நகர மக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பின்னர் மரம் நடும் நிகழ்ச்சி துவங்கியது. முதற்கட்டமாக, மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் மரங்கள் நட்டப்பட்டது. KEPA அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர்கள் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகிகள், பசுமை ஆர்வலர் சாமுவேல் ஞானதுரை, மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடி பராமரிப்பாளர் அய்யா சாமி உள்ளிட்டோர் மரங்களை நட்டனர்.
பின்னர், மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட ஃபாயிஸீன் சங்கத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், காயல்பட்டினம் - ஆறுமுகநேரி மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு தலைவர் நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் தலைமையில், நகரின் பல்வேறு இடங்களுக்கு மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி ஏ.ஆர்.இக்பால் தலைமையில், எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48), ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், நோனா அபூ ஹுரைரா உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
O.L.M.ஆரிஃப் (இலங்கை) |