DCW ஆலையின் விதிமீறலைக் கண்டித்து, இம்மாதம் 29ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA சார்பில் நேற்று நடத்தப்பட்ட - நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் வட்டார நலக்கமிட்டியினர் மற்றும் நகர்மன்ற அங்கத்தினர் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு்ளளது. விபரம் பின்வருமாறு:-
“புற்றுநோய் காரணி கண்டறியும் குழு - CANCER FACT FINDING COMMITTEE - CFFC” சார்பில், 03.03.2012 அன்று, காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக் கண்டறிந்து - பல்வேறு செயல்திட்டங்களுடன் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை அவ்வப்போது அளித்திடவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களால் துவக்கப்பட்டு - செயல்பட்டு வரும் அமைப்பு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA.
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த கழிவுநீர் - அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, DCW தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் - அவற்றின் தன்மைகள் - அவற்றை தயாரிக்கும்போது வெளியாகும் கழிவுகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்குவதற்காக, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார மக்கள் கூட்டமைப்புகள் மற்றும் நகர்மன்ற அங்கத்தினர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம், 18.11.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
KEPA தலைவர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழுத் தலைவர் நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம், KEPA துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். KEPA தலைவரும், கூட்டத் தலைவருமான ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, KEPA அமைப்பின் துவக்கம் மற்றும் இதுநாள் வரையிலான செயல்பாடுகள் குறித்து அதன் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, DCW தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் - அவற்றின் தன்மைகள் - அவற்றை தயாரிக்கும்போது வெளியாகும் கழிவுகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் உள்ளிட்டவை குறித்து KEPA அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், அசைபட உருப்பெருக்கி உதவியுடன் கூட்டத்தினருக்கு விளக்கினார்.
கூட்டத்தில் கலந்துகொண்டோரின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு பின்ருமாறு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:-
நவ.29 அன்று கடையடைப்பு & கண்டன ஆர்ப்பாட்டம்:
காயல்பட்டினம் கடற்பரப்பில் - அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளை மதிக்காமல் கழிவுநீரைக் கலக்கச் செய்தல் உள்ளிட்ட DCW தொழிற்சாலையின் அனைத்து மாசு கட்டுப்பாடு விதிமீறல் நடவடிக்கைகளையும் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு விதிகளின் படி அதனை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்திட மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளும் வகையிலும்,
29.11.2012 வியாழக்கிழமையன்று, நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் வட்டார நல கூட்டமைப்புகளின் ஆதரவுடன், நகரில் முழு கடையடைப்பு நடத்திடவும், அன்று காலை 09.30 மணியளவில் காயல்பட்டினத்திலிருந்து - பொதுமக்கள் பெருந்திரளாக வாகனங்களில் பேரணியாகப் புறப்பட்டு, DCW தொழிற்சாலை நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் நன்றி கூற, துஆ - ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் மற்றும் புறநகர் வட்டார நலக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48) ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய் |