காயல்பட்டினம் கடற்கரையில், இரு சக்கர - நாற்சக்கர வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரை நுழைவாயிலில் அவர்கள் கட்டுப்பாடற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதால், நடந்து செல்வோர் - வருவோருக்கு அது பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில், கடற்கரை நுழைவாயிலில் வாகனங்களை நிறுத்த காயல்பட்டினம் நகராட்சியின் துணையுடன் எல்லைக்கோடு அமைக்கப்பட்டுள்ளது.
கடற்கரை நுழைவாயிலிலிருந்து சுமார் 10 மீட்டர் இடைவெளியில் வாகனங்கள் எதையும் நிறுத்தாமலிருக்க தடுப்புக்கோடும், கடற்கரையில் முடியும் ஸீ-கஸ்டம்ஸ் சாலையின் வடபுறத்தில் நாற்சக்கர வாகனங்களை நிறுத்தவும் - தென்புறத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தவும் எல்லைக்கோடும் அமைக்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ தலைமையில், இம்மாதம் 19, 20 தேதிகளில் இப்பணி நடைபெற்றது. 20.11.2012 அன்று மாலை 04.45 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் அவற்றைப் பார்வையிட்டார்.

பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்படும் இதுபோன்ற எல்லா நற்காரியங்களுக்கும் நகராட்சி நிர்வாகம் துணை நிற்கும் என்று அவர் அப்போது தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், அலுவலர் ராதாகிருஷ்ணன், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
தினமும் கடற்கரைக்கு இருசக்கர - நாற்சக்கர வாகனங்களில் வருவோரிடம், புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்லைக் கோட்டை மதித்து செயல்பட்டு ஒத்துழைப்பளிக்குமாறு காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொள்ள, அவர்கள் மனமுவந்து ஒத்துழைப்பளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
|