காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று, காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், ஜாமிஆ மகுதூம் ஜும்ஆ பள்ளி, மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஆகிய - காயல்பட்டினம் நகரின் 4 ஜும்ஆ பள்ளிவாசல்களிலும், ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
அத்துடன், ஜும்ஆ தொழுகை நிறைவுற்று, பொதுமக்கள் இல்லம் திரும்பிச் செல்கையில், அனைவருக்கும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - Kayalpatnam Environmental Protection Association - KEPA சார்பில் சுற்றறிக்கை வினியோகிக்கப்பட்டது.
DCW தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அதனால் விளையும் பாதிப்புகள் ஆகிய விபரக் குறிப்புகள் அடங்கிய அப்பிரசுரத்தின் வாசகங்கள் பின்வருமாறு:-
DCW தொழிற்சாலை - ஒரு விளக்கம்!
DCW தொழிற்சாலை - 1925ஆம் ஆண்டில், தற்போதைய குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள திரங்கதாரா நகரில் - சோடா ஆஷ் என்ற பொருளை தயாரிப்பதற்காக துவக்கப்பட்டது. பின்னர் 1939ஆம் ஆண்டில், இந்நிறுவனம் - சாஹூ ஜெய்ன் குடும்பத்தால் வாங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சுமார் 43% பங்குகளை (நவம்பர் 2012 நிலவரப்படி - சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பு) இக்குடும்பத்தினர் வசமே உள்ளது.
1958ஆம் ஆண்டு, காஸ்டிக் சோடா என்ற பொருளை தயாரிப்பதற்காக இந்நிறுவனம் காயல்பட்டினத்தில் தொழிற்சாலையை நிறுவியது. அதற்காக, அப்போதைய மெட்ராஸ் அரசாங்கம் - காயல்பட்டினத்திலிருந்து 1064 ஏக்கர், புன்னைக்காயலிலிருந்து 175 ஏக்கர், சேர்ந்தமங்கலத்திலிருந்து 142 ஏக்கர் நிலங்களை வழங்கியது. பின்னர், 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் காயல்பட்டினத்திலிருந்து 144 ஏக்கர், புன்னைக்காயலிலிருந்து 448 ஏக்கர், சேர்ந்தமங்கலத்திலிருந்து 200 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இக்குத்தகை 1993இல் நிறைவுற்றது.
DCW நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருமானம் 1275 கோடி ரூபாய். இதில் 195 கோடி ரூபாய் அதன் குஜராத் பிரிவிலிருந்து வருகிறது. எஞ்சிய 1080 கோடி ரூபாய் காயல்பட்டினத்திலுள்ள பிரிவின் மூலம் வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 2000 பேர் பணியாற்றுகின்றனர். இதில் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் மட்டுமே உள்ளனர். காயல்பட்டினம் நகராட்சிக்கு இந்நிறுவனம், சொத்து வரி வகைக்கு ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரையும், தொழில் வரி வகைக்கு ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் ரூபாயும் செலுத்துகிறது. காயல்பட்டினம் நகராட்சியின் அனைத்து வகை வருமானமான - ஆண்டுக்கு சுமார் 4 கோடி ரூபாயில், DCW தொழிற்சாலை மூலம் வரும் வருமானம் சுமார் 6 சதவீதம் மட்டுமே.
2500 ஏக்கர் நிலம் தன் வசமுள்ளதாகக் கூறும் DCW நிறுவனம், காயல்பட்டினம் பகுதியில் மட்டும் சுமார் 1200 ஏக்கர் நிலம் வைத்துள்ளது. இதற்கான காலிமனை வரி (குறைந்தபட்சமாக) சதுர அடிக்கு 10 பைசா என அந்நிறுவனம் கட்டியிருந்தாலும், காயல்பட்டினம் நகராட்சிக்கு இவ்வகையில் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால், DCW நிறுவனம் காலிமனை வரி கட்டுவதாகத் தெரியவில்லை.
தயாரிக்கப்படும் பொருட்களும் - அவற்றின் விளைவுகளும்
காஸ்டிக் சோடா:
காயல்பட்டினத்தில் DCW நிறுவனம் தயாரிக்கத் துவங்கிய முதல் பொருள் காஸ்டிக் சோடா. (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 1 லட்சம் டன். வருவாய் ரூ.210 கோடி.) இதற்கான மூலப்பொருள் உப்பு. (கொள்முதல் 14 கோடி ரூபாய்.) காஸ்டிக் சோடா தயாரிப்பில் உபரியாக உருவாகுவது க்ளோரின் வாயு. இந்த வாயுவை DCW நிறுவனம் பல ஆண்டுகளாக காற்றிலேயே கலக்க விட்டிருந்தது. இதனால் காயல்பட்டினத்தில் பலமுறை புகை மண்டலம் உருவானது உண்டு. இதற்காக அரசு DCW நிறுவனத்தை தண்டித்ததும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கியதுமில்லை. தற்போது DCW நிறுவனம் க்ளோரின் வாயுவை பிற பொருட்களை தயாரிக்க பயன்படுத்துவதாகக் கூறுகிறது.
இந்நிறுவனத்தில் காஸ்டிக் சோடாவை தயாரிக்க 2007ஆம் ஆண்டு வரை (சுமார் 50 ஆண்டுகளாக) மிகவும் ஆபத்தான மெர்குரி - பாதரசத்தை அது பயன்படுத்தி வந்தது. DCW கழிவு கடலில் கலந்து, அக்கழிவின் வாயிலாக வெளியான மெர்குரி - இறந்த மீன்களின் வயிற்றில் இருந்ததற்கான ஆதார ஆய்வறிக்கைகள் பல உள்ளன. இந்நிறுவனம் மெர்குரியைப் பயன்படுத்துவதை நிறுத்தி 4 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறுகிறது. ஆனால், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கழிவுநீர் ஆய்விலும் மெர்குரி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலி வினைல் க்ளோரைட் (PVC):
DCW நிறுவனத்தின் முக்கிய உற்பத்திப் பொருட்களுள் ஒன்று PVC. (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 90,000 டன். வருவாய் 524 கோடி ரூபாய்). PVC தயாரிப்பதற்கான மூலப்பொருள் VCM. (கொள்முதல், 394 கோடி ரூபாய்.) கத்தர் நாட்டிலிருந்து - தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படும் இம்மூலப் பொருள், அதிகம் மக்கள் வாழும் முத்தையாபுரம், ஸ்பிக் நகர், பழைய காயல், ஆத்தூர் போன்ற ஊர்கள் வழியாக லாரிகள் மூலம் DCW தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
புற்றுநோயை உருவாக்கக்கூடிய தன்மையைக் கொண்ட இந்த VCM கொண்டு செல்லப்படும்போது விபத்து நேர்ந்தால், பல மைல்கள் தொலைவுக்கு தீய விளைவுகளை உண்டாக்கக் கூடியது. எனவே, PVC தயாரிக்கும் பல நிறுவனங்கள், அதற்கான மூலப்பொருளான VCMஐ தரை வழியாக பைப் மூலமே கொண்டு செல்கின்றன. ஆனால் DCW நிறுவனமோ இதற்கு டேங்கர் லாரிகளைப் பயன்படுத்துகிறது. இந்த லாரிகள் விபத்துக்குள்ளான நிகழ்வுகள் 2011, 2012இல் நடந்துள்ளது.
ட்ரை க்ளோரோ எத்திலின் - Tri Chloro Ethylene:
DCW நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு பொருள் ட்ரை க்ளோரோ எத்திலின். (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 7200 டன். வருவாய் 47 கோடி ரூபாய்.) இதற்கான மூலப்பொருள் கால்சியம் கார்பைட். (கொள்முதல் - 22 கோடி ரூபாய்.) ட்ரை க்ளோரோ எத்திலின் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சின்தடிக் ருட்டைல் - Synthetic Rutile:
இது DCW நிறுவனத்தின் மற்றொரு உற்பத்திப் பொருள். (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 48,000 டன். வருவாய் 240 கோடி ரூபாய்.) இதனை தயாரிக்க, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இல்மனைட் மணலை DCW நிறுவனம் (75 கோடி ரூபாய்க்கு) கொள்முதல் செய்கிறது. இப்பொருள் கதிர்வீச்சுத் தன்மை கொண்டது. மேலும் இப்பொருள் தயாரிக்கப்படும்போது உருவாகும் கழிவு காரணத்திற்காக DCW நிறுவனம், 1997ஆம் ஆண்டில் 5 மாதங்கள் மூடப்பட்டது. மேலும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திலும் - இதே காரணத்திற்காக இந்த உற்பத்திப் பிரிவு மூடப்பட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரையும் செய்யப்பட்டும், நடவடிக்கை எதுவுமில்லை.
நிலக்கரி மூலம் மின் உற்பத்தி - Coal Based Power Production:
DCW நிறுவனம் தனது தேவைக்கென மின்சாரம் உற்பத்தி செய்ய 2006ஆம் ஆண்டு அனுமதி பெற்றது. 58 மெகாவாட் அளவில் உற்பத்தி செய்ய - குறைந்தளவு மாசு கொண்ட வெளிநாட்டு நிலக்கரி பயன்படுத்தப்படும் என அது துவக்கத்தில் தெரிவித்திருந்தது. பின்னர், வெளிநாட்டில் நிலக்கரி வாங்குவதற்கு அதிக செலவாவதால் (அதிக மாசு கொண்ட) உள்நாட்டு நிலக்கரியைப் பயன்படுத்தத் துவங்கியது. (கொள்முதல் - 158 கோடி ரூபாய்.) உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை சந்தையில் விற்கவும் துவங்கியது இந்நிறுவனம்.
நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது உருவாகும் Fly Ash என்ற பொருளை தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு வழங்கிவிடுவதாகவும் DCW நிறுவனம் உறுதியளித்திருந்தது. ஆனால், இந்நிறுவனத்தின் Fly Ash கழிவுகள், நீரோடையில் கொட்டப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தெரிவித்துள்ளது.
DCW நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம்:
தான் தயாரிக்கும் பொருட்களின் அளவை அதிகரிக்கவும், புதிதாக ஒரு பொருளை தயாரிக்கவும் அனுமதி கோரி 2010ஆம் ஆண்டு இந்நிறுவனம் விண்ணப்பித்தது. 500 கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் 90 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம், ஆண்டொன்றுக்கு - TriChloro Ethylene உற்பத்தி 7200 டன்னிலிருந்து 15,480 டன் எனவும், PVC உற்பத்தி 90,000 டன்னிலிருந்து 1,50,000 டன் எனவும் அதிகரிக்கும். புதிதாக CPVC என்ற பொருள் - 14,400 டன் அளவில் உற்பத்தி செய்யப்படும். நிலக்கரி மூலம் மின் உற்பத்தி 58 மெகாவாட்டிலிருந்து 108 மெகாவாட் என அதிகரிக்கும்.
DCW நிறுவனத்தால் இதுவரை சுற்றுப்புறச் சூழலும், பொதுமக்களும் பெருமளவில் பாதிப்பிற்குள்ளானதைக் கருத்திற்கொண்டு, நவம்பர் 29, 2011 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற - DCW நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட காயலர்கள் உள்ளிட்ட பலர் இதற்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது என தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மேலும், இத்திட்டம் குறித்து இவ்வாண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி சென்னையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தனது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தார். இருப்பினும், மத்திய - மாநில அரசமைப்புகள் ஒப்புதல் தெரிவித்த வண்ணம் உள்ளன.
மக்கள் எதிர்ப்பு ஏன் அவசியம்?
DCW நிறுவனம் பல ஆண்டுகளாக சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். (அவர்களில் பலர் இறந்தும் உள்ளனர்.) இதுகுறித்த எந்த ஆய்வும் முறைப்படி செய்யப்படவில்லை. இது இவ்வாறிருக்க, DCW நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் புதிதாக வெளிவந்துள்ளது. இந்நிறுவனத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படாமல் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
DCW நிறுவனத்தின் இப்புதிய திட்டத்தால் ஆபத்துகள் பல மடங்கு அதிகரிக்கும். பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய VCM வேதிப் பொருளைக் கொண்டு செல்லும் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அவற்றின் விபத்துக்கள் வாய்ப்பும் அதிகரிக்கும். நிலக்கரி மூலம் மாசு அதிகரிக்கும்.
DCW நிறுவனமும் தாமிரபரணி தண்ணீரையே நம்பியிருப்பதால், ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு அதிகமுள்ள நம் பகுதிகளில் மேலும் தட்டுப்பாடு ஏற்படும். இயற்கை வளங்கள் மேலும் பாதிக்கப்படும். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் ஆட்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இதுபோன்ற பல காரணங்களுக்காக, DCW நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும். நடப்பு உற்பத்தியும் பொதுமக்கள் - சுற்றுச்சூழதை பாதிக்காத வகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி...
காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு - கண்டன ஆர்ப்பாட்டம் - பொதுக்கூட்டம்!
நாள்: 29.11.2012 வியாழக்கிழமை.
கடையடைப்பு: காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை
ஆர்ப்பாட்டம்: மாலை 04.30 மணி
பொதுக்கூட்டம்: இரவு 07.00 மணி)
இடம்: வள்ளல் சீதக்காதி திடல், காயல்பட்டினம்\
வெளியீடு: காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு
Kayalpatnam Environmental Protection Association - KEPA (23.11.2012)
இவ்வாறு, சுற்றறிக்கையின் வாசகங்கள் அமைந்துள்ளது. |