இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தலைக்கவசம் அணியும் சட்டத்தை மதித்து செயல்படுவதன் மூலம், நடவடிக்கையைத் தவிர்த்திடுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
09.11.2012 அன்று நடைபெற்ற சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில், மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988 - பிரிவு 129இன் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் விதமாக 19.11.2012 முதல் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் 19.11.2012 முதல் தலைக்கவசம் (Helmet) அணிவது கட்டாயமாக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, பொதுமக்களில் பெரும்பாலோர் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டிவரும் நிலையில், இன்னமும் ஒரு பகுதியினர் தலைக்கவசம் அணியாமலே வாகனங்களை ஓட்டி வரும் நிலை தொடர்ந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவோர் - காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகங்களைச் சேர்ந்த அலுவலர்களால் பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், 19.11.2012 முதல் 22.11.2012 வரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் 126 நபர்கள் பிடிக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதுபோல, காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில், 295 நபர்கள் பிடிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.25,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கால விரயம் மட்டுமின்றி, பண விரயமும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சோதனைகள் மற்றும் அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இனி வருங்காலங்களிலும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், அனைவரும் தலைக்கவசம் அணிந்து - இந்நிலை தமக்கு ஏற்படுவதைத் தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கையில் ஏற்படுகின்ற சிறு விபத்துகள் கூட ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பை தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் ஏற்படுத்தி விடுகிறது என்பதால், அதனைத் தவிர்த்திடும் வகையில் பொதுமக்கள் அனைவரும் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, தலைக்கவசத்துடன் பாதுகாப்பாக இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதன் மூலம் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்நடவடிக்கைக்கு தகுந்த ஒத்துழைப்பை நல்கி,டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறீாகள்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |