காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் - ஏழ்மை நிலையிலுள்ள பிலால்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிட ஹைதராபாத் காயல் நல மன்ற பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆந்திர மாநிலம் - ஹைதராபாத் நகரில் காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் ஹைதராபாத் காயல் நல மன்றத்தின் (KWAH) 3ஆவது பொதுக்குழுக் கூட்டம் 17.11.2012 சனிக்கிழமையன்று, மன்ற உறுப்பினர் பி.எஸ்.ஏ.ஹபீப் முஹம்மத் இல்லத்தில் நடைபெற்றது.
மன்றத் தலைவர் ஹாஜி பி.எஸ்.முஹம்மத் ஹஸன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். மன்றத்தை அரசுப் பதிவு செய்தது பற்றியும், அதன் கடந்த கால செயல்பாடுகள் பற்றியும் அவர் தனதுரையில் எடுத்துரைத்தார்.
பின்னர், வருங்காலங்களில் மன்றம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. நிறைவில்,
1) துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு உதவல்...
2) நுஸ்கியார் ட்ரஸ்ட் மூலம் நடத்தப்பட்டு வரும் முதியோர் இல்லத்திற்கு பொருளுதவி செய்தல்...
3) காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பிலால்களில் வறியவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பொருளுதவி செய்தல்...
4) ‘காயல்பட்டணம்’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்க முயற்சித்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்தல்...
ஆகிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மன்றப் பொருளாளர் ஏ.எச்.முஹம்மத் இஸ்மாஈல் - மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
இவ்வாறு, ஹைதராபாத் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அப்துர்ரஹ்மான் மவ்லானா |