DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து - காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நலக்கமிட்டிகள் ஆதரவுடன் நவ.29ஆம் தேதி கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்திட, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA தீர்மானித்துள்ளது. நிகழ்வுகள் அனைத்திலும் - வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்களும் பங்கேற்க வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு்ளளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
DCW தொழிற்சாலையின் நுழைவாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டது. சட்டம் - ஓழங்கு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, ஊருக்குள் நடத்துவதற்கு மட்டுமே காவல்துறை அனுமதி கிட்டியது. பின்னர், அதன் சாதக - பாதகங்கள் குறித்து கலந்தாலோசித்ததன் அடிப்படையில்,
29.11.2012 வியாழக்கிழமையன்று முழு கடையடைப்பு நடத்தவும்,
அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும்,
அதனைத் தொடர்ந்து, அதே இடத்தில் அன்றிரவு 07.00 மணியளவில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நமதூர் - அல்லாஹ்வால் நமக்களிக்கப்பட்ட அமானிதம். அதனை நன்றாக காத்துக்கொள்வதன் மூலம், நாமும் நலம் பெற்று, நம் சந்ததிக்கும் பாதுகாக்கப்பட்ட காயல்பட்டினத்தை அளிக்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும், அவற்றில் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தவர்களாக, கடையடைப்புக்கு முழு ஆதரவளிக்குமாறும், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் நகரின் அனைத்து பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெளியூர் - வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்களில், அன்றைய தினம் ஊர் வரும் வாய்ப்புள்ளவர்கள் - அவசியம் நேரம் ஒதுக்கி வந்து - இப்போராட்டத்தில் பங்கேற்று, நகரின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒரே குரலில் பிரதிபலிக்க வருமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல இறைவன், நமதூரை - சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட - மாசு மருவற்ற ஊராகவும், கொடிய நோய் - வியாதிகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஊராகவும் ஆக்கியருள்வானாக...
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |