காயல்பட்டினம் கடற்கரையில், இரு சக்கர - நாற்சக்கர வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரை நுழைவாயிலில் அவர்கள் கட்டுப்பாடற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதால், நடந்து செல்வோர் - வருவோருக்கு அது பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில், கடற்கரை நுழைவாயிலில் வாகனங்களை நிறுத்த காயல்பட்டினம் நகராட்சியின் துணையுடன் எல்லைக்கோடு அமைக்கப்பட்டு வருகிறது.
கடற்கரை நுழைவாயிலிலிருந்து சுமார் 10 மீட்டர் இடைவெளியில் வாகனங்கள் எதையும் நிறுத்தாமலிருக்க தடுப்புக்கோடும், கடற்கரையில் முடியும் ஸீ-கஸ்டம்ஸ் சாலையின் வடபுறத்தில் நாற்சக்கர வாகனங்களை நிறுத்தவும் - தென்புறத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தவும் எல்லைக்கோடும் அமைக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ தலைமையில், 19.11.2012 திங்கட்கிழமையன்று (நேற்று) நடைபெற்ற பணிகளை, காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் நேரில் பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார்.
தடுப்புக்கோடு மற்றும் எல்லைக்கோடு அமைப்புப் பணியையொட்டி, நேற்று காலை முதல் இரவு வரை வாகனங்களில் கடற்கரைக்கு வருவோரிடம், கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் சார்பில் ஒத்துழைப்பு கோரப்பட்டது.
உடனடியாக அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், இந்த ஏற்பாடு மிகவும் அவசியமானது என்றும், இதற்கு ஒத்துழைப்பு தர எப்போதும் ஆயத்தமாகவே உள்ளதாகவும் தெரிவித்தனர். |