காயல்பட்டினம் கே.டி.எம். தெருவில், தாயிம்பள்ளியிலிருந்து வடபுறத்திலுள்ள குடியிருப்புகளின் உட்புறத்தில் நாராயண ஓடை என்ற பொது ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் குறிப்பிட்ட சில பகுதிகளைத் தவிர மற்றவை கொஞ்சங்கொஞ்சமாக சுற்றுவட்டார பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க எஞ்சிய ஓடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழியின்றி குப்பைகளைத் தேக்கும் இடமாக மாறியுள்ளது. அப்பகுதியில் வீடுகளைக் கொண்டுள்ளோர் தம் வீட்டுப் பின்புறங்களை மட்டும் சுத்தமாகப் பார்த்துக்கொள்வதாகவும், எஞ்சிய பகுதிகளில் யாரும் பார்க்காத நேரங்களில் தம் வீட்டுக் குப்பைகளைக் கொட்டிச் செல்வதாகவும், இதனால் எல்லாக் காலங்களிலும் - குறிப்பாக மழைக்காலங்களில் ஈ, கொசு, விஷ ஜந்துக்கள் பெருகி, வீடுகளுக்கு உட்புறம் வரை வந்து அச்சுறுத்துவதாகவும், அப்பகுதியிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள்.
ஏற்கனவே இந்த ஓடை நகர்மன்றத் துணைத்தலைவரும் - அந்தப் பகுதியை உள்ளடக்கிய 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் முயற்சியில், நகராட்சி மூலம் துப்புரவு செய்யப்பட்டது குறித்து அவர்களிடம் வினவுகையில், அந்த ஓடையின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே சுத்தம் செய்யப்பட்டதாகவும், இதர பகுதிகளில் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும், இதுநாள் வரை பலமுறை அவரிடம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எதுவுமில்லை என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீனிடம் வினவுகையில், இதுவரை அந்தப்பகுதியிலுள்ள குப்பை குறித்து யாரும் முறையிடவில்லை என்றும், தனது வார்டில் சுகாதாரக் கேடு என யார் தகவல் தந்தாலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தான் ஆயத்தமாகவே உள்ளதாகவும், தற்போது தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். |