காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து - காயல்பட்டினம் அரிமா சங்கத்தின் சார்பில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் 17.11.2012 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நகர அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா முன்னிலை வகித்தார். நகர அரிமா சங்க செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் பி.அஹ்மத் ஹிஷாம் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அரிமா சங்க மண்டல தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வரவேற்புரையாற்றினார்.
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வாழ்த்துரை வழங்கினார்.
மக்கள் நலனுக்காக அரிமா சங்கத்தால் இம்முகாம் நடத்தப்படுவதைப் பாராட்டிப் பேசிய அவர், நகரில் குப்பைகளை சேகரிக்க - நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பல முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாகவும், குறைந்த எண்ணிக்கையிலான துப்புரவுப் பணியாளர்களை மட்டுமே கொண்டு செய்யப்பட்டு வரும் இப்பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என்றும் தெரிவித்த அவர்,
பொதுமக்கள் குப்பைகளை அலட்சிமாக பல இடங்களில் கொட்டுவதைத் தவிர்த்து, நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் வரும்போது கொடுத்து - அவர்களின் பணிகளில் ஒத்துழைப்பளித்தால்தான் ஊரில் முழுமையான சுகாதாரத்தை நிலவச் செய்ய முடியும் என்றும், நகராட்சியின் எந்தப் பணியானாலும் அதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.
கடந்த கால மனமாச்சரியங்களை மனதில் வைத்துக்கொண்டிராமல், நகர்நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்து தனதுரையை நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சலின் தன்மைகள், விளைவுகள், அது பரவும் விதம், தடுப்பு முறைகள் உள்ளிட்ட விபரக்குறிப்புகளுடன், காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் விளக்கவுரையாற்றினார்.
புழுப் பருவத்திலிருக்கையில் புட்டியில் சேகரிக்கப்பட்ட - டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அவர் தனதுரையின்போது பொதுமக்களுக்குக் காண்பித்தார்.
பின்னர், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகளை வழிநடத்தி வரும் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், அப்பணிகளை முன்னின்று செய்து வரும் நகராட்சியின் துப்புரவுப் பணி முன்னாள் மேற்பார்வையாளர் (மேஸ்திரி) ராதாகிருஷ்ணன், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லக்ஷ்மி மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய நகர்மன்றத் தலைவர், நகர்மன்ற 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லக்ஷ்மி ஆகியோருக்கு, நகர அரிமா சங்கம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகளான மீரா ஸாஹிப், சின்னத்தம்பி, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா, வி.எம்.எஸ்.முஹ்யித்தீன், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், நகர்மன்ற 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ, எல்.கே.மேனிலைப்பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், அதன் பெற்றோர் - ஆசிரியர் கழக செயலாளர் ஹாஜி அஹ்மத் முஸ்தஃபா உள்ளிட்டோரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அஹ்மத் ஏ.ஜெ.முஸ்தஃபா தலைமையில் அப்பிரிவின் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
|