KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPAவின் பொதுக்குழுவில், அதன் புதிய தலைவராக ஹாஜி ஜெஸ்மின் கலீல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், DCW தொழிற்சாலையிலிருந்து காயல்பட்டினத்தையொட்டிய கடலில் கலக்கப்படும் கழிவுநீர் குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது.
“புற்றுநோய் காரணி கண்டறியும் குழு - CANCER FACT FINDING COMMITTEE - CFFC” சார்பில், 03.03.2012 அன்று, காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செயல்படுத்திடும் பொருட்டு புதிதாகத் துவக்கப்பட்ட அமைப்பு KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA.
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக் கண்டறிந்து - பல்வேறு செயல்திட்டங்களுடன் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை அவ்வப்போது அளித்ல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றை KEPA செய்து வருகிறது.
இவ்வமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் 15.11.2012 வியாழக்கிழமையன்று (இன்று) காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் பள்ளிக்குட்பட்ட ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மற்றொரு துணைத்தலைவர் ஹாஜி ஜெஸ்மின் கலீல், பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நோனா அபூஹுரைரா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா - அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், கூட்டம் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
அடுத்து, காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து காயல்பட்டினத்தையொட்டிய கடலில் கழிவுநீர் கலக்கப்படுவது குறித்தும், அதனால் விளையும் பாதிப்புகள் குறித்தும், நகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடுவதற்காக அமைப்பின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களும் - சிறப்பழைப்பாளர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - புதிய தலைவர் தேர்வு:
KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPAவின் நடப்பு தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் அவர்கள் பணி நிமிர்த்தமாக வெளிநாடு சென்றுள்ளதையடுத்து, இதுவரை அமைப்பின் துணைத்தலைவராக சேவையாற்றி வரும் ஹாஜி ஜெஸ்மின் கலீல் அவர்களை அமைப்பின் புதிய தலைவராக இக்கூட்டம் தேர்ந்தெடுக்கிறது.
தீர்மானம் 2 - செயற்குழுவில் சிறுமாற்றம்:
இதுவரை அமைப்பின் துணைத்தலைவராக இருந்த ஹாஜி ஜெஸ்மின் கலீல் அவர்கள் தலைவரானதையடுத்து, வெற்றிடமாக உள்ள துணைத்தலைவர் பொறுப்பிற்கு, அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது அவர்களையும், சமூக ஆர்வலர் ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி அவர்களை புதிய செயற்குழு உறுப்பினராகவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - அமைப்பை அரசுப் பதிவு செய்தல்:
KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை - எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் முறைப்படி அரசுப் பதிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடாக அமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் இக்கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது.
தீர்மானம் 4 - மரம் வளர்ப்புக்காக துணைக்குழு:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் ‘பசுமைக் காயல்’ திட்டத்திற்கு உறுதுணையாக, அமைப்பின் சார்பில் நகரெங்கும் மரங்களை நட்டு பசுமைப்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டு, அதற்கான துணைக்குழுவினராக,
எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48) அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு,
ஹாஜி உ.ம.ஷாஹுல் ஹமீத், ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், கே.எம்.டி.சுலைமான், ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித், கோமான் மீரான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தீர்மானம் 5 - நகர ஜமாஅத்துகள் / பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம்:
நகரின் அனைத்து ஜமாஅத்துகள் / பொதுநல அமைப்புகள் / புறநகர் மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்தாலோசனைக் கூட்டத்தை 18.11.2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் கூட்டுவதென்றும்,
நகர சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அக்கூட்டத்தில் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுப்பதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அமைப்பின் புதிய தலைவர் ஹாஜி ஜெஸ்மின் கலீல் ஏற்புரை வழங்கினார். இப்பொறுப்பின் கீழ் தன்னாலான அனைத்துப் பணிகளையும் சிறப்புற செய்வதற்கு அனைவரின் மனப்பூர்வமான ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் தனதுரையில் தெரிவித்தார்.
ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் நன்றி கூற, ஹாஃபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கீ துஆவுக்குப் பின் - ஸலவாத், கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், KEPA அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்களும், கத்தர் காயல் நல மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் உள்ளிட்ட சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். |