இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இம்மாதம் 19ஆம் தேதி முதல் தலைக்கவசம் (ஹெல்மெட்) கட்டாயமாக அணிந்திருக்க வேண்டுமென்றும், தவறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 129இன்படி, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற நடைமுறை தூத்துக்குடி மாவட்டத்தில் அமலில் இருந்து வருகிறது.
இருப்பினும், ஒருசிலர் மட்டுமே ஹெல்மெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் - இரு சக்கர வாகன விபத்துகளில் பலர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும்.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் 19.11.2012 முதல் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தவறினால், காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, 19.11.2012 முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அனைவரும் ஹெல்மெட் அணிந்து தங்கள் விலைமதிக்கவியலாத உயிரைப் பாதுகாத்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |