காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் வெளியூர் - வெளிநாடுகளில் இருக்கும் காயலர்கள், DCW தொழிற்சாலையின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்திடுமாறு - அவரவர் பகுதிகளிலிருந்தவாறு கோரிக்கையளிக்குமாறு KEPA சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
சென்னையில் நவம்பர் 28 - புதன் அன்று, சென்னை-வாழ் காயலர்கள் - தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு, மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அலுவலகங்களின் மூத்த அதிகாரிகளிடம், DCW நிறுவனத்தின் விதிமீறலகள் குறித்து KEPA தயார் செய்திருந்த ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
இச்சந்திப்பில் டைமண்ட் கே.ஏ.ஆர்.செய்யத், பல்லாக் சுலைமான், எஸ்.எஸ்.எம். சதக்கத்துல்லாஹ், குளம் முஹம்மது தம்பி, நெட்காம் பீ.ஏ. புஹாரி ஆகியோர் உடனிருந்தனர்.
|