காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற பின்னர், மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதன் துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, நகரின் மூத்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் காதிர் ஸாஹிப் ஜாஸிம் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கூட்டத் தலைவரும், KEPA அமைப்பின் தலைவருமான ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் தலைமையுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, நகரின் பசுமை ஆர்வலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் சிற்றுரையாற்றினார்.
DCWவிற்கெதிரான போராட்டங்கள் ஏன்?’ என்ற தலைப்பில் எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார். அமைப்பின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ - நகரில் உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும், அந்நோய்கள் பரவாமல் தடுக்க தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அருட்செல்வன் சிறப்புரையாற்றினார்.
ஒரு தொழிற்சாலை செயல்பட வேண்டிய விதம், அது விதிமீறி செயல்படுகையில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சுற்றுச்சூழலில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.
அவரைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நிஜாமுத்தீன் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்தும், அத்துறை சிறப்புற செயல்பட்டுவிட்டாலே இதுபோன்ற சீரழிவுகள் காணாமல் போகும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
எம்.ஏ.புகாரீ (48) கூட்ட தீர்மானங்களை வாசிக்க, அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
எம்.ஏ.இப்றாஹீம் (48) நன்றி கூற, துஆ - ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
29.11.2012 அன்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஆகிய அனைத்து நிகழ்வுகளுக்குமான ஏற்பாடுகளை, அமைப்பின் தலைவர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் தலைமையில், துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர். ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, ‘நட்புடன் தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஏ.எஸ்.புகாரீ, நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஷஃபீயுல்லாஹ், எஸ்.அப்துல் வாஹித், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கேப்டன் ஸதக்கத்துல்லாஹ், எம்.ஏ.புகாரீ, யு.நவ்ஃபல், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், நோனா அபூ ஹுரைரா, காஜா முஹ்யித்தீன், தங்ஙள் ஹபீப், ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, எம்.டி.ஹபீப் முஹம்மத், பி.ஏ.புகாரீ, எம்.ஏ.இப்றாஹீம் (48), எம்.ஏ.புகாரீ (48), கே.எம்.டி.சுலைமான் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கள உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய் |