காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தின் நிறைவில், எம்.ஏ.புகாரீ (48) தீர்மானங்களை வாசிக்க, பார்வையாளர்கள் அனைவரும் ஒரே குரலில் தக்பீர் முழக்கத்துடன் அதற்கு ஒப்புதலளித்தனர்.
தீர்மான வாசகங்கள் பின்வருமாறு:-
தீர்மானம் 1 - கடலில் கலக்கப்படும் மாசு:
காயல்பட்டினம் கடற்பரப்பில் மாசு கலந்த அமிலக் கழிவு நீரை கலப்பதை டி.சி.டபிள்யு. நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், இனி ஒருபோதும் கலக்கக்கூடாது எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2 - இல்மனைட் தொழிற்சாலையை மூடல்:
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட படி, டி.சி.டபிள்யு. நிறுவனத்தின் ILMENITE தொழிற்சாலையை உடனடியாக மூடிட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3 - சுதந்திரமான அமைப்பின் மூலம் ஆய்வு:
டி.சி.டபிள்யு. நிறுவனத்தால் 53 ஆண்டுகளாக - மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்பின் மூலம் நகரிலும், சுற்றுப்புறத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ள அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4 - ஆய்வறிக்கைக்குப் பின்பே விரிவாக்கம் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்:
டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்து முழுமையான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு, மக்களின் அச்சங்கள் முழுமையாக நீக்கப்பட்ட பின்னரே டி.சி.டபிள்யு. நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5 - சட்ட நடவடிக்கை:
சுற்றுச்சூழல் குறித்த - டி.சி.டபிள்யு. நிறுவனத்தின் சட்ட விதிமீறல்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 - நகராட்சிக்குக் கோரிக்கை:
காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள காயல்பட்டினம் நகராட்சியை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7 - சென்னைக்கு காயலர்கள் திரளாகச் சென்று மனு:
டி.சி.டபிள்யு நிறுவனத்தின் சுற்றுச்சூழல் விதிமீறல்கள், விரிவாக்கத் திட்டம் குறித்த அச்சங்கள் ஆகியன குறித்து எடுத்துக் கூற, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிலையத்தில் காயலர்கள் பெருந்திரளாகச் சென்று மனு அளிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது
தீர்மானம் 8 - அடுத்த கட்ட நடவடிக்கை:
காயல்பட்டினம் மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், இதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள டிசம்பர் மாத இறுதியில் கலந்தாலோசித்து முடிவு செய்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது
தீர்மானம் 9 - Paliative Care சேவை:
விழுப்புரம், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புற்றுநோய் குறித்த paliative care சேவையை, தூத்துக்குடி மாவட்டத்திலும் - குறிப்பாக காயல்பட்டினதிலும் அறிமுகம் செய்ய இக்கூட்டம் கேட்டுகொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |