அபூதபீ காயல் நல மன்றத்தின் 02ஆவது பொதுக்குழுக் கூட்டம் 16.11.2012 அன்று நடைபெற்று முடிந்துள்ளது. துபை காயல் நல மன்றம், சிங்கப்பூர் காயல் நல மன்றம் ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செய்தித் தொடர்பாளர் M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபீ காயல் நல மன்றத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் 16 - 11 - 2012 வெள்ளிக்கிழமை அன்று காலை மன்றத்தின் கவுரவத் தலைவர் அல்ஹாஜ் I. இம்தியாஸ் அகமது அவர்களின் தலைமையில் கூடியது.
காலை பத்து மணி முதல் உறுப்பினர்கள் வருகைத் தர தொடங்கினார்கள். மன்றத்தின் தலைவர் ஹாபிஃழ் ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரியும் மன்றத்தின் துணைத்தலைவர் M.M.மக்பூல் அஹ்மதுவும் முன்னிலை வகித்தார்கள்.
மௌலவி இஸ்ஹாக் லெப்பை கிராத் ஓத மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் S.A.C.ஷாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
சிறப்பழைப்பாளர்கள்:
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக துபாய் காயல் நலமன்றத்தின் தலைவர் அல்ஹாஜ் J.S.A. புஹாரி அவர்களும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவர் ரஷீத் ஜமான் அவர்களும் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
சிறப்பு விருந்தினர்:
சிறப்பு விருந்தினராக அமீரகத்தின் பனியாஸ் மெட்டிரியல் நிறுவனத்தின் உரிமையாளர் நாகூர் அப்துல் ஹமீத் மரைக்காயர் கலந்து சிறப்பித்து சிறப்புரையாற்றினார்கள். சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசை துணைத் தலைவர் மக்பூல் வழங்கினார்.
மருத்துவக் கையேடு வெளியீடு:
இந்நிகழ்ச்சியின் தலைவரும் மன்றத்தின் தலைவரும் சிறப்பான உரை தந்தார்கள். மன்றத்தின் செயலாளர் V.S.T. சேக்னா லெப்பை மன்ற அறிக்கை வாசிக்க, மருத்துவ கையேடும் வெளியிடப்பட்டது.
உறுப்பினர் கருத்துரைகள்:
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் K.V. ஹபீப் முகம்மது, மன்றத்தின் துணைச் செயலாளர் ஆர்க்கிடெக்ட் ஹபீப் முகம்மது, மூத்த செயற்குழு உறுப்பினர் சுபுஹான் பீர் முகம்மது ஆகியோர்கள் மன்றம் பற்றிய கருத்துரைகள் வழங்கினார்கள். மன்றத்தினால் கடந்த 11 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சமுதாய பணிகள் பற்றிய சிறு குறிப்புகளடங்கிய பிரசுரம் வந்திருந்தோருக்கு கொடுக்கப்பட்டது.
மருத்துவ முகாம்:
பின்னர் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை DR. விளக்கு செய்யித் அஹ்மதுவும், DR. ஹமீத் யாசரும் வழி நடத்தினார்கள். மருத்துவ பரிசோதனையின் விளைவுகள் ஆராயப்பட்டதில் நம் மக்களில் 60 சதவிகிதம் மேற்ப்பட்டோருக்கு மிகைப்பட்ட இரத்த அழுத்தம் மற்றும் அதிக உடற்பருமன் இருப்பதாக கண்டறியப்பட்டது.
பின்னர் உரையாற்றிய இரு மருத்துவர்களும் பின் வருமாறு மருத்துவ அறிவுரைகள் வழங்கினர்:
1. உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ளவும்,
2. கொழுப்பு நிறைந்த உணவுகளான சிவப்பு இறைச்சி வகைகள் போன்றவற்றை குறைத்துக் கொள்ளவும். பழங்களையும் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்,
3. வாரத்தில் 5 நாட்களுக்காவது குறைந்தபட்சம் தினசரி 30 நிமிடங்கள் உடற்ப்பயிற்சி அல்லது நடை மேற்கொள்ளவும்,
4. மன அழுத்தத்தை நமது ஆளுமையில் வைத்துக்கொள்ளவும்,.
5. புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளோர் அவற்றை நிறுத்தவும்,
மருத்துவ முகாமில் பங்குபெற்றோருக்கு பயனுள்ள அறிவுரைகள் பல வழங்கப்பட்டன.
கூட்ட நிறைவு:
இறுதியாக மன்றத்தின் மக்கள் தொடர்பாளர் A.R. ரிபாய் நன்றி நவிழ ஹாஃபிழ் F. ஷாஹுல் ஹமீது துஆ பிரார்த்தனையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்!
விளையாட்டுப் போட்டிகள்:
நிகழ்ச்சிகளை மன்றத்தின் பொருளாளர் ஹாஃபிழ் ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ழரி அவர்கள் நெறிப்படுத்தினார். நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்று மணக்க மணக்க காயல் களரி சாப்பாடு பரிமாறப்பட்டது. அதன் பின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
துபாய் காயல் நலமன்றத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தம் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர். மாலை 6 மணியளவில் அனைவரும் மன நிறைவுடன் இல்லம் திரும்பினர். அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வுகளை மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழுவினர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கூட்ட நிகழ்வுகளின் படத்தொகுப்பை, கீழ்க்காணும் இணைப்புகளில் சொடுக்கி முழுமையாகக் காணலாம்.
தொகுப்பு 1
தொகுப்பு 2
இவ்வாறு அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
சுப்ஹான் N.M. பீர் முஹம்மத் |