காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெற்ற கடையடைப்பு எவ்வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தக் கடையடைப்பையொட்டி, காயல்பட்டினம் கடையக்குடி (கொம்புத்துறை)யில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தனர். அன்றைய தினம் அவர்கள் யாரும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.
நேற்று மாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடையக்குடி (கொம்புத்துறை), கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) ஆகிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவர்களும் கலந்துகொண்டனர்.
படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |