காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் வெளியூர் - வெளிநாடுகளில் இருக்கும் காயலர்கள், DCW தொழிற்சாலையின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்திடுமாறு - அவரவர் பகுதிகளிலிருந்தவாறு கோரிக்கையளிக்குமாறு KEPA சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இயங்கி வரும் ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) அங்கத்தினருக்கும், முன்னேற்பாட்டுடன் KEPA வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில், டில்லி வாழ் காயலர்களுடன் இணைந்து, 29.11.2012 அன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.எம்.ஹாரூன், எம்.அப்துர்ரஹ்மான் ஆகியோரிடம் KEPAவின் கோரிக்கை மனுவை ஜக்வா அமைப்பினர் அளித்தனர்.
அரசின் மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மதிக்காமல் செயல்பட்டு வரும் DCW தொழிற்சாலையின் அத்துமீறல் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் குரலெழுப்புமாறு அவர்களிடம் அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டது. சந்திப்பின் நிறைவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.எம்.ஹாரூன் - இக்கோரிக்கையை வலியுறுத்தி - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனுக்கு பரிந்துரைக் கடிதம் அளித்தார்.
இச்சந்திப்பில், டில்லியிலிருந்து கே.எம்.தம்பி (கே.ஏ.எஸ். ஜெய்னுல் ஆப்தீன் அன் கம்பெனி), மொகுதூம் (கே.ஏ.எஸ். அன் கம்பெனி), வாவு ஷெய்க் அப்துல் காதிர் ஆகியோரும், ஜெய்ப்பூரிலிருந்து செய்யித் முஹம்மத், எஸ்.கே.செய்யித் இப்றாஹீம் (சின்ன எஸ்.கே.) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.எம்.ஹாரூனுடனான சந்திப்புக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான் ஏற்பாடு செய்திருந்தார்.
தகவல் & படங்கள்:
K.M.S.மொகுதூம்
கே.ஏ.எஸ்.ஜெய்னுலாப்தீன் அன் கோ
புது டில்லி
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 21:36 / 30.11.2012] |